மகளிர் ஐபிஎல் 2023 : ஆர்சிபியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் வெற்றி! புள்ளிப் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேற்றம்!
மும்பை இந்தியன்ஸ் தனது 2023 மகளிர் ஐபிஎல் லீக் சுற்றின் இறுதிப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியை வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்கள் எடுத்தது. ஆர்சிபி அணியில் அதிகபட்சமாக எல்லிஸ் பெர்ரி மற்றும் ரிச்சா கோஷ் தலா 29 ரன்கள் எடுத்தனர். பந்துவீச்சில் மும்பை இந்தியன்ஸை அணியின் அமெலியா கெர் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளையும், இஸ்ஸி வோங் மற்றும் நட் ஸ்கிவர் தலா 2 விக்கெட்டுகளையும் எடுத்தனர்.
4 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் வெற்றி
126 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் 73 ரன்களில் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில், பூஜா வஸ்த்ரகர் மற்றும் அமெலியா கெர் ஆகியோர் வெற்றியை நோக்கி வழிநடத்தினர். இறுதியில் 16.3 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றனர். அமெலியா கெர் கடைசி வரை அவுட்டாகாமல் 31 ரன்கள் எடுத்தார். இந்த வெற்றியின் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி தற்போது புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. எனினும் இரவு நடக்கும் போட்டியில் டெல்லி கேப்பிட்டல் வெற்றி பெற்றால், புள்ளிப்பட்டியலில் இடம் மாறலாம். முதலிடம் பிடிக்கும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது.