
ENGvsNZ : நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை பந்தாடிய நியூசிலாந்து; 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி
செய்தி முன்னோட்டம்
ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரின் முதல் போட்டியில் வியாழக்கிழமை (அக்டோபர் 5) நியூசிலாந்து இங்கிலாந்து கிரிக்கெட் அணியை ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
முன்னதாக, போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லாதம் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார்.
இதையடுத்து பேட்டிங்கைத் தொடங்கிய இங்கிலாந்து அணியில் ஜோ ரூட் அதிகபட்சமாக 77 ரன்கள் எடுத்தார்.
அந்த அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 282 ரன்கள் எடுத்தது.
இந்த போட்டியில், இங்கிலாந்து அணியில் 11 வீரர்களும் பேட்டிங் செய்து அனைவரும் இரட்டை இலக்கத்தில் ரன் எடுத்ததன் மூலம், ஒருநாள் கிரிக்கெட்டில் இந்த அரிய நிகழ்வை செய்த முதல் அணி என்ற சாதனை படைத்தது.
Newzealand beats England by 9 wickets
நியூசிலாந்து அணியின் பேட்டிங் அபாரம்
283 ரன்கள் எனும் இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில், அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் வில் யங் இரண்டாவது ஓவரில் தான் எதிர்கொண்ட முதல் பந்திலேயே டக்கவுட் ஆகி வெளியேறினார்.
எனினும், அதன் பின்னர் ஜோடி சேர்ந்த டெவோன் கான்வே மற்றும் ரச்சின் ரவீந்திரா கடைசி வரை அவுட்டாகாமல் 36.2 ஓவர்களிலேயே வெற்றி இலக்கை எட்டினர்.
டெவோன் கான்வே 152 ரன்களும், ரச்சின் ரவீந்திரா 123 ரன்களும் எடுத்தனர்.
ரச்சின் ரவீந்திரா சதமடித்ததன் மூலம், உலகக்கோப்பையில் இளம் வயதில் சதமடித்த நியூசிலாந்து வீரர் என்ற சாதனையை படைத்தார்.
மேலும், 82 பந்துகளில் சதத்தை எட்டி உலகக்கோப்பையில் வேகமாக சதமடித்த நியூசிலாந்து வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்தார்.