ENGvsAFG : இங்கிலாந்தை வாரிச் சுருட்டிய ஆப்கானிஸ்தான்; 69 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி
ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரில் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 15) நடைபெற்ற போட்டியில் ஆப்கான் கிரிக்கெட் அணி இங்கிலாந்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. முன்னதாக, போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீச முடிவு செய்ததை அடுத்து, ஆப்கானிஸ்தான் பேட்டிங் செய்து 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 284 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரஹ்மானுல்லா குர்பாஸ் அதிகபட்சமாக 80 ரன்களும், இக்ராம் அலிகில் 58 ரன்களும் எடுத்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய அடில் ரஷித் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
215 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன இங்கிலாந்து
285 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரரான ஜானி பேர்ஸ்டோ வெறும் 2 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான டேவிட் மாலன் 32 ரன்கள் எடுத்து நல்ல தொடக்கத்தை அமைத்தாலும், அதன் பின்னர் வந்த வீரர்களில் ஹாரி புரூக் மட்டும் சிறப்பாக விளையாடி 66 ரன்கள் எடுத்தார். ஆப்கானிஸ்தான் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் அவுட்டாகி வெளியேறிய நிலையில், 215 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஆப்கானிஸ்தான் அணியின் முஜீப் உர் ரஹ்மான் மற்றும் ரஷீத் கான் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். நடப்பு சாம்பியனான இங்கிலாந்து இதுவரை மூன்று போட்டிகளில் விளையாடி ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.