ஒருநாள் உலகக்கோப்பையில் டாப் 7 இடங்களை பிடிக்கும் அணிகள் சாம்பியன்ஸ் டிராபிக்கு தகுதி
செய்தி முன்னோட்டம்
தற்போது நடந்து வரும் ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரின் ரவுண்ட்-ராபின் நிலை முடிந்த பிறகு முதல் ஏழு இடங்களைப் பிடிக்கும் அணிகள், பாகிஸ்தானுடன் சேர்ந்து அந்த நாட்டில் 2025இல் நடக்கும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்கு தகுதி பெறும்.
2021இல் அறிவிக்கப்பட்ட எட்டு அணிகள் பங்கேற்கும் 2025 சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்கான தகுதியை ஐசிசி அங்கீகரித்தது.
இந்நிலையில், நடந்துவரும் உலகக்கோப்பையில் பங்கேற்றுள்ள அணிகளில் கடைசி இரண்டு இடங்களில் உள்ள வங்கதேசம் மற்றும் இங்கிலாந்தை தவிர மற்ற அனைத்து அணிகளும் தகுதி பெறும் வாய்ப்பைக் கொண்டுள்ளன.
எனினும் லீக் சுற்றில் அனைத்து அணிகளுக்கும் இன்னும் குறைந்தபட்சம் மூன்று போட்டிகள் உள்ள நிலையில், அடுத்தடுத்த போட்டிகளில் இந்த நிலை மாறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ICC Champions Trophy 2025 Qualifying Countries
வாய்ப்பை இழந்த வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே மற்றும் அயர்லாந்து
ஐசிசியின் முழு உறுப்பினர் நாடுகளாக இருந்தாலும், வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே மற்றும் அயர்லாந்து ஆகியவை இந்தியாவில் நடந்து வரும் ஒருநாள் உலகக்கோப்பை போட்டிக்கு தகுதி பெறவில்லை.
இதனால் 2025இல் நடைபெற உள்ள ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பையும் இழந்துள்ளது. இதற்கிடையே, ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியின் நடப்பு சாம்பியனாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணி உள்ளது.
இது 2017இல் இறுதிப்போட்டியில் இந்தியாவை வீழ்த்தி பட்டம் வென்றது. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 338 ரன்கள் குவித்த நிலையில், இந்தியா 158 ரன்களுக்கு சுருண்டு படுதோல்வியை சந்தித்தது.
இந்தியாவை பொறுத்தவரை, கடைசியாக 2013இல் நடந்த போட்டியில் எம்எஸ் தோனி தலைமையில் பட்டத்தை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.