ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை போட்டி அட்டவணையில் மாற்றம்; ஜெய் ஷா அறிவிப்பு
ஐசிசி முழு உறுப்பினர் நாடுகளில் சில, அட்டவணை குறித்து ஆட்சேபனைகளை எழுப்பியுள்ளதால், 2023 ஒருநாள் உலகக்கோப்பையில் சில மாற்றங்கள் செய்ய உள்ளதாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார். இது குறித்து பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா கூறுகையில், சில அணிகளின் போட்டிகளுக்கு இடையேயான இடைவெளியில் சிக்கல் இருப்பதாகவும், தேதி மற்றும் நேரம் மட்டும் மாற்றப்படும் என்றும் தெரிவித்துள்ளார். குறிப்பாக ஆறு நாள் இடைவெளிகளைக் கொண்ட அணிகளின் இடைவெளி குறைக்கப்படும் மற்றும் இரண்டு நாள் இடைவெளி கொண்ட அணிகளின் இடைவெளி அதிகரிக்கப்படும் என்று டெல்லியில் உலகக்கோப்பை தொடர்பாக மாநில சங்கங்களிடையே நடத்திய ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு கூறினார். எனினும் தேதி மற்றும் நேரம் மட்டுமே மாற்றப்படும் என்றும் இடம் மாற்றப்படாது என்றும் தெரிகிறது.
உலகக்கோப்பைக்கான டிக்கெட் விற்பனை குறித்து ஜெய் ஷா தகவல்
ஒருநாள் உலகக்கோப்பை டிக்கெட் விலை மற்றும் விற்பனை குறித்த அறிவிப்பு விரைவில் பிசிசிஐ மற்றும் ஐசிசியால் கூட்டாக வெளியிடப்படும் என்று ஜெய் ஷா தெரிவித்துள்ளார். மாநில சங்கங்களுடனான கூட்டத்திற்கு பிறகு இது குறித்து பேசிய ஜெய் ஷா, "நாங்கள் இன்று மாநில சங்கங்களுடன் டிக்கெட்டுகள் குறித்து பேசினோம். 90% சங்கங்கள் டிக்கெட் விற்பனை திட்டத்தை இறுதி செய்துவிட்டன. சில சங்கங்கள் இன்னும் தயார் செய்யவில்லை. அவர்களுக்காக திங்கட்கிழமை வரை அவகாசம் கொடுத்துள்ளோம். ஐசிசியும் பிசிசிஐயும் கூட்டாக டிக்கெட் விலை மற்றும் அனைத்தையும் அறிவிக்கும். டிக்கெட் பார்ட்னரும் ஏறக்குறைய இறுதிசெய்யப்பட்டு விட்டது." என்றார்.