மேலும் ஒரு பாகிஸ்தான் போட்டிக்கு சிக்கல்; ஒருநாள் உலகக்கோப்பை போட்டி அட்டவணையில் கூடுதல் தாமதம்
ஒருநாள் உலகக்கோப்பை 2023இன் திருத்தப்பட்ட போட்டி அட்டவணை வெளியிடுவதில் மேலும் தாமதம் ஆகும் என தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தானுடன் அக்டோபர் 15ஆம் தேதி அகமதாபாத்தில் மோத திட்டமிடப்பட்ட நிலையில், பாதுகாப்பு காரணமாக அதை அக்டோபர் 14ஆம் தேதிக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதும் போட்டியை மாற்றுவதால் ஏற்படும் இடைஞ்சலை தவிர்க்க வேறு சில போட்டிகளையும் மாற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த விஷயங்களை சரி செய்து திருத்தப்பட்ட போட்டி அட்டவணை ஆகஸ்ட் 6ஆம் தேதிக்குள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மேற்குவங்க காவல்துறை பாகிஸ்தான் விளையாடும் போட்டிக்கு பாதுகாப்பு தரமுடியாது எனக் கூறிவிட்டதாகத் தெரிகிறது.
மேற்குவங்க காவல்துறை பாதுகாப்பு கொடுக்க மறுப்பதன் பின்னணி
கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நவம்பர் 12ஆம் தேதி பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இங்கிலாந்துடன் மோதும் வகையில் போட்டி அட்டவணை தயாரிக்கப்பட்டிருந்தது. ஆனால், கொல்கத்தாவில் மிக முக்கிய பண்டிகையான காளி பூஜை திருவிழாவும் அதே நாளில் இருப்பதால், அந்த தினத்தில் போட்டிக்கு பாதுகாப்பு வழங்க முடியாது என மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், நவம்பர் 12ஆம் தேதி கொல்கத்தாவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள போட்டியை வேறு நாளில் நடத்த திட்டமிடுமாறு பெங்கால் கிரிக்கெட் சங்கம் பிசிசிஐயிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. முந்தைய ஒருநாள் உலகக்கோப்பை சீசன்களுடன் ஒப்பிடும்போது இந்தமுறை போட்டி அட்டவணை ஏற்கனவே தாமதமானது. வெளியிடப்பட்ட அட்டவணையிலும் சிக்கல் எழுந்துள்ள நிலையில், திருத்தப்பட்ட போட்டி அட்டவணையை இறுதி செய்ய முடியாமல் பிசிசிஐ தவித்து வருகிறது.