ஒருநாள் உலகக்கோப்பையில் இன்னும் அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்துள்ள பாகிஸ்தான்; எப்படி தெரியுமா?
வெள்ளிக்கிழமை (அக்டோபர் 27) நடைபெற்ற போட்டியில் தென்னாப்பிரிக்காவிடம் தோற்றதன் மூலம், ஒருநாள் உலகக்கோப்பையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் சோகம் தொடர்கதையாக மாறிவிட்டது. முன்னதாக, பாகிஸ்தான் அணி தனது அரையிறுதி வாய்ப்பை தக்கவைக்க இந்த வெற்றி அவசியமானதாக இருந்தது. போட்டி நடந்த சென்னை சேப்பாக்கம் மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமான பிட்ச் என்பதால் முதலில் பேட்டிங் செய்யும்போது அதிக ரன் குவித்தால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்பது நிதர்சனம். ஆனால், பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களின் சொதப்பலான ஆட்டத்தால் அந்த அணி 47 ஓவர்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 270 ரன்கள் மட்டுமே எடுத்தது. பாகிஸ்தான் அணியில் கேப்டன் பாபர் அசாம் 50 ரன்களும், சவுத் ஷகீல் 52 ரன்களும் எடுத்தனர்.
தென்னாப்பிரிக்காவுக்கு கிலியை ஏற்படுத்திய பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள்
எளிதான இலக்குடன் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி களமிறங்கினாலும், பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் அந்த அணிக்கு சிம்ம சொப்பனமாக செயல்பட்டனர். தென்னாப்பிரிக்கா அணியில் ஐடென் மார்க்ரம் மட்டும் பாகிஸ்தான் பந்துவீச்சை தாக்குப் பிடித்து 91 ரன்கள் குவித்தார். மற்ற வீரர்கள் யாரும் 30 ரன்களை கூட எட்டவில்லை. இதனால் தென்னாப்பிரிக்கா அணி கடைசி நேரத்தில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் போராடியே வெற்றி பெற்றது. பாகிஸ்தான் அணி நூலிழையில் தோல்வியைத் தழுவினாலும், ஷாஹீன் அப்ரிடி 3 விக்கெட்டுகளை வீழ்த்திய நிலையில், ஹாரிஸ் ரவூப், முகமது வாசிம் ஜூனியர் மற்றும் உசாமா மிர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதற்கிடையே, இந்த போட்டியில் தோல்வி அடைந்தாலும், பாகிஸ்தான் இன்னும் முழுமையாக அரையிறுதி வாய்ப்பை இழக்கவில்லை.
இதர அணிகளின் கையில் பாகிஸ்தான் அரையிறுதி வாய்ப்பு
பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றியின் மூலம் ஒருநாள் உலகக்கோப்பை 2023 புள்ளிகள் பட்டியலில் இந்தியாவை பின்னுக்குத் தள்ளி தென்னாப்பிரிக்கா 6 போட்டிகளில் 10 புள்ளிகளைப் பெற்று நிகர ரன் ரேட் அடிப்படையில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. இரண்டாவது இடத்தில் உள்ள இந்தியா, ஞாயிற்றுக்கிழமை இங்கிலாந்தை எதிர்கொண்டு வெற்றி பெற்றால் மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறும். இதற்கிடையே, நியூசிலாந்து 8 புள்ளிகளுடன் 3வது இடத்திலும், ஆஸ்திரேலியா 6 புள்ளிகளுடன் முதல் 4 இடங்களிலும் நீடித்து வருகின்றன. இவை தவிர, இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தானுக்கும் அரையிறுதி வாய்ப்பு இன்னும் பிரகாசமாக உள்ளது. பாகிஸ்தானை பொறுத்தவரை மிகவும் சிக்கலான நிலையில் இருந்தாலும், மற்ற அணிகளின் வெற்றி தோல்வி மூலம் அரையிறுதி வாய்ப்பை இன்னும் தக்கவைத்துள்ளது.
பாகிஸ்தான் தகுதி பெறுவதற்கான வாய்ப்புகள்
முதலில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தனக்கு மீதமுள்ள மூன்று போட்டிகளிலும் வெற்றி பெறுவதோடு, நிகர ரன் ரேட் விகிதத்தை அதிகரிக்க வேண்டும். இது நடக்க வேண்டுமானால் அனைத்து போட்டிகளிலும் மிகப்பெரிய வித்தியாசத்தில் வெற்றி இருக்க வேண்டும். மேலே குறிப்பிட்டது நடக்கும்பட்சத்தில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி தனது அடுத்த 4 போட்டிகளில் 3ல் தோல்வியடைய வேண்டும். இதிலும் குறிப்பாக ஆஸ்திரேலியா நியூசிலாந்தை தோற்கடித்து மற்றும் மீதமுள்ள மூன்று போட்டிகளில் தோல்வியடைவது பாகிஸ்தானுக்கு மிகவும் நல்லது. இது நடக்கும்பட்சத்தில் ஆஸ்திரேலியா 8 புள்ளிகளுடன் முடிக்கும். பாகிஸ்தான் 10 புள்ளிகளுடன் இருக்கும். அதேநேரத்தில் ஆஸ்திரேலியா தனது அடுத்த 4 போட்டிகளில் 2ல் தோல்வியடைந்தாலும், நிகர ரன் ரேட் அதிகமாக இருந்தால் பாகிஸ்தான் முன்னேற வாய்ப்புண்டு.
நியூசிலாந்து மூலம் பாகிஸ்தானுக்கு கிடைக்கும் வாய்ப்பு
நியூசிலாந்து கிரிக்கெட் அணி எஞ்சியிருக்கும் அனைத்துப் போட்டிகளிலும் தோல்வியடையும் சமயத்தில், இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் அடுத்த 4 போட்டிகளில் குறைந்தது 2ல் தோல்வியடைந்தாலும், பாகிஸ்தானுக்கு வாய்ப்பு உண்டு. அப்போது நியூசிலாந்து 8 புள்ளிகளுடன் இருக்கும், பாகிஸ்தான் 10 புள்ளிகளுடன் முடியும். அதே நேரம் நியூசிலாந்து ஒரு வெற்றி பெற்று 10 புள்ளிகள் சமநிலையில் இருக்கும்பட்சத்தில், பாகிஸ்தானின் அரையிறுதி வாய்ப்பை நிகர ரன் ரேட் இறுதி செய்யும். இது எளிதல்ல. இருந்தாலும், ஒருநாள் உலகக்கோப்பையில் எப்போதும் எதுவும் நடக்கலாம் என்பதால், பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு முன்னேற இன்னும் வாய்ப்புண்டு என்பதே எதார்த்தமாக உள்ளது.