மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் : மேரி கோமின் சாதனையை சமன் செய்வாரா நிகத் ஜரீன்?
புதுடெல்லியில் உள்ள இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வரும் மகளிர் குத்துச்சண்டை உலக சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டிகளில் இந்தியாவின் நான்கு வீராங்கனைகள் சனிக்கிழமை (மார்ச் 25) மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் (மார்ச் 26) மோத உள்ளனர். காமன்வெல்த் விளையாட்டு சாம்பியனான நிது கங்காஸ் (48 கிலோ), ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற லோவ்லினா போர்கோஹைன் (75 கிலோ), நடப்பு உலக சாம்பியனான நிகத் ஜரீன் (50 கிலோ), ஆசிய சாம்பியன் சவீதி பூரா (81 கிலோ) ஆகியோர் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளனர். இதில் நிகத் கடந்த முறை 52 கிலோ எடைப்பிரிவில் சாம்பியனான நிலையில், இந்த முறை தனது எடைப் பிரிவை மாற்றியிருந்தாலும், தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி வருகிறார்.
இரண்டாவது முறை சாம்பியன் பட்டம் வெல்வாரா நிகத் ஜரீன்?
நிகத் ஜரீன் அரையிறுதியில் கொலம்பியாவின் இங்க்ரிட் வலென்சியாவை 5-0 என்ற கணக்கில் தோற்கடித்து இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார். இறுதிப் போட்டியில் ஆசிய சாம்பியனான வியட்நாமின் குயென் தி டாமை எதிர்கொள்கிறார். இறுதிப் போட்டியில் பட்டம் வென்றால், மேரி கோமிற்குப் பிறகு உலக சாம்பியன்ஷிப்பில் ஒன்றுக்கு மேற்பட்ட தங்கம் வென்ற இரண்டாவது இந்திய பெண் குத்துச்சண்டை வீராங்கனை என்ற சாதனையை நிகத் படைப்பார். மகளிர் உலக சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை இந்திய வீராங்கனைகள் 4 பேர் எட்டியுள்ள நிலையில், 2006இல் பெற்ற நன்கு பதக்க சாதனையை சமன் செய்ய உள்ளது.