சாம்பியன்ஸ் டிராபியில் பங்கேற்க பாகிஸ்தான் செல்கிறதா இந்திய கிரிக்கெட் அணி? பிசிசிஐ பதில்
பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா திங்களன்று (செப்டம்பர் 30) அடுத்த ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் பங்கேற்க இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்குச் செல்வதா என்பது குறித்த முடிவு அரசாங்கத்தின் ஒப்புதலைப் பொறுத்தது எனத் தெரிவித்துள்ளார். 2025 பிப்ரவரி 19 முதல் மார்ச் 9 வரை சாம்பியன்ஸ் டிராபி தொடரை பாகிஸ்தானில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ராஜீவ் சுக்லா இதுகுறித்து கூறுகையில், "இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. ஆனால் சர்வதேச சுற்றுப்பயணங்களுக்கு, நாங்கள் எப்போதும் அரசாங்கத்தின் அனுமதியைப் பெறுவோம் என்பது எங்கள் கொள்கை. அது அரசாங்கத்தின் கையில் உள்ளது. எங்கள் அணி எந்த நாட்டிற்கும் செல்ல வேண்டுமா அல்லது கூடாதா என்பதை அரசுதான் முடிவு செய்யும்." என்று ராஜீவ் சுக்லா செய்தியாளர்களிடம் கூறினார்.
மத்திய அரசின் முடிவுக்கு கட்டுப்படுவதாக பிசிசிஐ விளக்கம்
ராஜீவ் சுக்லா மேலும் கூறுகையில், இந்த விஷயத்தில் மத்திய அரசு என்ன முடிவு எடுத்தாலும், தாங்கள் அதற்குக் கட்டுப்படுவோம் என்று கூறியுள்ளார். இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது செய்தியாளர்களிடம் ராஜீவ் சுக்லா இவ்வாறு தெரிவித்தார். இந்தியாவும் பாகிஸ்தானும் ஐசிசி போட்டிகளில் மட்டுமே விளையாடுகின்றன. மும்பை தீவிரவாத தாக்குதலில் 150 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து 2008ஆம் ஆண்டு முதல் இருதரப்பு கிரிக்கெட்டுக்காக இந்தியா பாகிஸ்தானுக்கு செல்லவில்லை. ஏழு வருட இடைவெளிக்குப் பிறகு கடந்த ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பைக்காக பாகிஸ்தான் இந்தியா வந்திருந்தது. சாம்பியன்ஸ் டிராபிக்காக இந்தியா பாகிஸ்தானுக்கு செல்லாது என்று யூகிக்கப்படுகிறது.
சாம்பியன்ஸ் டிராபியை பாகிஸ்தானில் இருந்து மாற்ற கோரிக்கை
இந்திய அணி பாகிஸ்தான் செல்லாது என்பதால், போட்டியை பாகிஸ்தானில் இருந்து விலக்கி இலங்கை அல்லது துபாயில் நடத்த ஐசிசியிடம் பிசிசிஐ கோரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, கடந்த ஆண்டு பாகிஸ்தானில் திட்டமிடப்பட்ட ஆசியக் கோப்பை தொடரில், இறுதியில் இந்தியாவுக்காக ஒரு ஹைபிரிட் மாதிரியின்படி இந்தியாவை இலங்கையில் அனைத்து போட்டிகளையும் விளையாட அனுமதித்தது. இதன் காரணமாக, ஆசிய கோப்பையில் பாகிஸ்தானில் நான்கு போட்டிகள் மட்டுமே நடந்தது. எஞ்சிய ஒன்பது போட்டிகள் இலங்கையில் நடந்தன. ஆனால், சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இதற்கு ஒப்புக்கொள்ளாது எனக் கூறப்படுகிறது. ஐசிசியும் தனது பங்கிற்கு, அரசாங்கக் கொள்கைக்கு எதிராக ஒரு உறுப்பினர் அணியை விளையாட கட்டாயப்படுத்த மாட்டோம் என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.