வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடர் : 17 ஆண்டுகால சாதனையை தக்கவைக்குமா இந்தியா?
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா தோல்வியடைந்தது. முன்னதாக, இந்த தொடரில் விளையாடாத வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கி அவர்களை பரிசோதிக்க அணி நிர்வாகம் முடிவு செய்தது. முதல் போட்டியில் இது எப்படியோ பலனளித்தாலும், இரண்டாவது போட்டியில் ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி இடம் பெறாத நிலையில், இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியைத் தழுவியது. இதன் மூலம் தொடரில் தற்போது இந்திய கிரிக்கெட் அணி தொடரில் 1-1 என சமநிலையில் இருக்கும் சூழலில், மூன்றாவது போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இ ந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான ஒருநாள் தொடர்களில் இந்தியா கடைசியாக தோற்றது எப்போது என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
2006இல் வெஸ்ட் இண்டீசிடம் தொடரை இழந்த ராகுல் டிராவிட் தலைமையிலான இந்திய அணி
தற்போது இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கும் ராகுல் டிராவிட், அணியின் கேப்டனாகஇருந்தபோது, 2006 ஆம் ஆண்டு ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியுடன் இந்தியா மோதியது. அந்த தொடரில் இந்திய அணி ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்ற நிலையில், தொடரை 1-4 என்ற கணக்கில் இழந்தது. இந்த தொடருக்கு பிறகு இரு அணிகளும் 12 ஒருநாள் தொடர்களில் விளையாடியுள்ளன. இரு தரப்புக்கும் இடையே தற்போது நடைபெற்று வருவது 13வது தொடராகும். மூன்றாவது போட்டியில் வெற்றி பெற்று, தனது வெற்றிகரமான வரலாற்றை தொடரும் முனைப்புடன் இந்திய அணி உள்ள நிலையில், 17 ஆண்டுகால சாதனையை முறியடிக்கும் முயற்சியில் வெஸ்ட் இண்டீஸ் அணியும் உள்ளது.