Loading...
வெல்லிங்டன் டெஸ்டில் முகமது சிராஜை ஏன் சேர்த்திருக்க வேண்டும்? வெளிநாட்டு மண்ணில் மிரட்டும் சிராஜின் புள்ளிவிவரங்கள்
வெளிநாட்டு மண்ணில் சிறப்பாகச் செயல்பட்டும் நியூசிலாந்து டெஸ்டில் சிராஜ் புறக்கணிக்கப்பட்டது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

வெல்லிங்டன் டெஸ்டில் முகமது சிராஜை ஏன் சேர்த்திருக்க வேண்டும்? வெளிநாட்டு மண்ணில் மிரட்டும் சிராஜின் புள்ளிவிவரங்கள்

எழுதியவர் Vasuki
Nov 23, 2026
06:25 pm

செய்தி முன்னோட்டம்

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் இமாலய ரன்கள் குவித்து வெற்றியின் விளிம்பிற்குச் சென்றது. இருப்பினும், 5-வது நாளில் டேரில் மிட்செல் - கிளென் பிலிப்ஸ் கூட்டணியை உடைக்க முடியாமல் போனதால் போட்டி டிராவில் முடிந்தது. வேகப்பந்துவீச்சுக்குச் சாதகமான இந்த மைதானத்தில் பும்ராவுடன் ஆகாஷ் தீப், அன்சுல் கம்போஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோரை இந்திய அணி நிர்வாகம் களமிறக்கியது. அதே சமயம், அனுபவ வீரர்களான முகமது சிராஜ் மற்றும் ரவீந்திர ஜடேஜாவை பெஞ்சில் அமர வைத்ததே வெற்றி வாய்ப்பு நழுவ முக்கியக் காரணமாக அமைந்துவிட்டதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

108 விக்கெட்டுகள்

மிரள வைக்கும் சிராஜின் டெஸ்ட் புள்ளிவிவரங்கள்

பும்ராவிற்கு நிகரான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய முகமது சிராஜ், இதுவரை விளையாடியுள்ள 48 டெஸ்ட் போட்டிகளில் மொத்தம் 144 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

இதில் வெளிநாட்டு மண்ணில் விளையாடிய 29 டெஸ்ட் போட்டிகளில் மட்டும் 108 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தியுள்ளார்.

குறிப்பாக இங்கிலாந்தில் 46 விக்கெட்டுகள் (11 டெஸ்ட்), ஆஸ்திரேலியாவில் 33 விக்கெட்டுகள் (8 டெஸ்ட்), தென் ஆப்பிரிக்காவில் 12 விக்கெட்டுகள் (4 டெஸ்ட்), வெஸ்ட் இண்டீஸில் 7 விக்கெட்டுகள், வங்கதேசத்தில் 6 விக்கெட்டுகள் மற்றும் இலங்கையில் 4 விக்கெட்டுகள் என அந்நிய மண்ணில் சிராஜின் சாதனை பட்டியல் மிகவும் வலுவாக உள்ளது.

நிர்வாகத்திற்கு ரசிகர்கள் கேள்வி

நியூசிலாந்து மண்ணில் ஒரு போட்டியில் கூட ஆடாத சிராஜ்

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து போன்ற ஜாம்பவான் அணிகளை அவர்களது சொந்த மண்ணிலேயே திணறடித்த முகமது சிராஜ், இதுவரை நியூசிலாந்து மண்ணில் ஒரு டெஸ்ட் போட்டியில் கூட விளையாடியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கடைசியாக இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடிய சிராஜுக்கு, நியூசிலாந்து ஒருநாள் தொடரிலும் போதிய வாய்ப்பு வழங்கப்படாத நிலையில், தற்போது டெஸ்ட் அணியிலிருந்தும் புறக்கணிக்கப்பட்டிருப்பது ரசிகர்களைக் கொந்தளிக்க வைத்துள்ளது.

கிறைஸ்ட்சர்ச்சில் நடைபெறவுள்ள 2-வது டெஸ்ட் போட்டியிலாவது சிராஜுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என கிரிக்கெட் ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

ADVERTISEMENT