LOADING...
நேபாளத்தை துவம்சம் செய்த வெஸ்ட் இண்டீஸ்; டி20 உலகக்கோப்பையில் முதல் அணியாக சூப்பர் 8க்குள் நுழைந்தது
டி20 உலகக்கோப்பை 2026இல் முதல் அணியாக சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது வெஸ்ட் இண்டீஸ்

நேபாளத்தை துவம்சம் செய்த வெஸ்ட் இண்டீஸ்; டி20 உலகக்கோப்பையில் முதல் அணியாக சூப்பர் 8க்குள் நுழைந்தது

எழுதியவர் Sekar Chinnappan
Feb 15, 2026
03:42 pm

செய்தி முன்னோட்டம்

மும்பை வான்கடே மைதானத்தில் இன்று (பிப்ரவரி 15, 2026) நடைபெற்ற டி20 உலகக்கோப்பை 2026 தொடரின் 25 வது லீக் போட்டியில், நேபாள அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், நடப்பு உலகக்கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு அதிகாரப்பூர்வமாகத் தகுதி பெற்ற முதல் அணி என்ற பெருமையை வெஸ்ட் இண்டீஸ் பெற்றுள்ளது.

நேபாளம்

நேபாளத்தின் போராட்டம் மற்றும் சரிவு

டாஸ் வென்று முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்த வெஸ்ட் இண்டீஸ், ஆரம்பத்திலிருந்தே நேபாள கிரிக்கெட் அணிக்கு நெருக்கடி கொடுத்தது. நேபாள அணி ஒருகட்டத்தில் 46 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தவித்தது. திபேந்திர சிங் ஐரி பொறுப்புடன் விளையாடி 47 பந்துகளில் 58 ரன்கள் எடுத்தார். அவருக்குத் துணையாக சோம்பால் காமி 26* ரன்கள் எடுத்தார். இறுதியில் நேபாள அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் எடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அனுபவ வீரர் ஜேசன் ஹோல்டர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். மேத்யூ ஃபோர்டு, அகீல் ஹொசைன், ஷமார் ஜோசப் மற்றும் ரோஸ்டன் சேஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர்.

வெஸ்ட் இண்டீஸ்

ஹோப் - ஹெட்மையர் ஜோடியின் அதிரடி

134 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, ஆரம்பம் முதலே நேபாள பந்துவீச்சைச் சிதறடித்தது. தொடக்க ஆட்டக்காரர் பிராண்டன் கிங் 22 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு ஜோடி சேர்ந்த கேப்டன் ஷாய் ஹோப் மற்றும் ஷிம்ரோன் ஹெட்மையர் ஜோடி, நேபாள வீரர்களுக்குப் பந்துவீச வாய்ப்பளிக்காமல் வெற்றியை உறுதி செய்தது. ஷாய் ஹோப் 44 பந்துகளில் 61* ரன்களும் (5 பவுண்டரி, 3 சிக்ஸர்), ஹெட்மையர் 32 பந்துகளில் 46* ரன்களும் எடுத்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணி 15.2 ஓவர்களிலேயே ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து இலக்கை எட்டியது.

Advertisement

சூப்பர் 8

சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி

இந்த வெற்றியின் மூலம் குரூப் சி பிரிவில் விளையாடிய மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் வெஸ்ட் இண்டீஸ் முதலிடத்தில் உள்ளது. நேபாள அணி தொடர்ச்சியாக மூன்று தோல்விகளைச் சந்தித்ததால், இத்தொடரின் சூப்பர் 8 சுற்றுக்கான வாய்ப்பை இழந்து அதிகாரப்பூர்வமாக வெளியேறியுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் தனது அடுத்த போட்டியில் இத்தாலி அணியை எதிர்கொள்ள உள்ளது.

Advertisement