மேட்ச் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்ட பிரபல வெஸ்ட் இண்டீஸ் வீரர் இடைநீக்கம்!
செய்தி முன்னோட்டம்
போட்டியில் மேட்ச் ஃபிக்ஸிங் செய்ய முயன்றதற்காக வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் வீரர் டெவோன் தாமஸை ஐசிசி தற்காலிகமாக இடைநீக்கம் செய்துள்ளது.
33 வயதான அவர் மீது ஏழு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஐசிசியின் ஊழல் எதிர்ப்பு சட்டத்தின் கீழ் தாமஸ் குற்றவாளி என ஐசிசி கண்டறிந்ததை அடுத்து இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
டெவோன் தாமஸ் மேல்முறையீடு செய்ய 14 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது.
லங்கா பிரீமியர் லீக், அபுதாபி டி10, மற்றும் கரீபியன் பிரீமியர் லீக் ஆகிய மூன்று ஃபிரான்சைஸ் அடிப்படையிலான லீக்குகளில் விளையாடும் போது அவர் மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படும் நிலையில், மூன்று நாட்டு கிரிக்கெட் வாரியங்களின் ஊழல் தடுப்பு பிரிவுகளும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றன.
devon thomas cricket numbers
டெவோன் தாமஸ் கிரிக்கெட் புள்ளிவிபரம்
டெவோன் தாமஸ் 2009 இல் வங்காளதேசத்திற்கு எதிராக ரோசோவில் நடந்த ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார்.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக 21 ஒருநாள் போட்டிகளில் 14 என்ற குறைந்த சராசரியில் 238 ரன்கள் குவித்துள்ளார்.
கடந்த ஆண்டு அடிலெய்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடினார்.
டி20களில், அவர் 117 போட்டிகளில் 1,454 ரன்களை 112.53 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் தொகுத்துள்ளார்.
இதில் நான்கு அரைசதங்களும் அடங்கும். ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிக்கு எதிராக துபாயில் நடைபெறவுள்ள மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடருக்கான மேற்கிந்திய தீவுகள் அணியில் தாமஸ் இடம் பெற்றுள்ள நிலையில், இந்த தடையால் அவர் அணியில் நீடிப்பாரா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.