இன்று தொடங்குகிறது ஃபிஃபா உலகக்கோப்பை 2026; இந்தியாவில் இலவசமாகப் பார்ப்பது எப்படி? முழு விபரங்கள் இதோ
செய்தி முன்னோட்டம்
உலகமே ஆவலோடு எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கும் ஃபிஃபா உலகக்கோப்பை 2026 கால்பந்து திருவிழா தற்பொழுது தொடங்கவுள்ளது. இந்தியாவில் இதன் ஒளிபரப்பு உரிமத்தை ஜீ எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ள நிலையில், ஆன்லைன் ஸ்ட்ரீமிங்கிற்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. எனினும், எந்தவொரு கட்டணமும் இன்றி இலவசமாகப் போட்டிகளைக் காண விரும்பும் இந்திய ரசிகர்களுக்காகத் தூர்தர்ஷன் சிறப்பு ஏற்பாட்டைச் செய்துள்ளது.
தொலைக்காட்சி மற்றும் ஆன்லைன் ஸ்ட்ரீமிங் விபரங்கள்
இந்திய ஒளிபரப்பு உரிமமும் புதிய சேனல்களும்
இந்தியாவில் இந்த உலகக் கோப்பையை ஒளிபரப்புவது யார் என்ற குழப்பம் நீடித்து வந்த நிலையில், ஜீ எண்டர்டெயின்மெண்ட் இதன் அதிகாரப்பூர்வ ஒளிபரப்பு உரிமத்தை இறுதியாகக் கைப்பற்றியுள்ளது. இதற்காக யுனைட்8 ஸ்போர்ட்ஸ் 1, யுனைட்8 ஸ்போர்ட்ஸ் 1 எச்டி, யுனைட்8 ஸ்போர்ட்ஸ் 2 மற்றும் யுனைட்8 ஸ்போர்ட்ஸ் 2 எச்டி என நான்கு புதிய விளையாட்டு சேனல்களை ஜீ நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. ஜீ5 ஆன்லைன் செயலியில் இதைப் பார்க்க மூன்று மாதங்களுக்கு ரூ. 799 மற்றும் ஒரு வருடத்திற்கு ரூ. 1699 என இரு கட்டணத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இலவச நேரலை போட்டிகளின் அட்டவணை
டிடி ஸ்போர்ட்ஸில் இலவசமாகப் பார்க்கக்கூடிய போட்டிகள்
ஜீ தொலைக்காட்சி அல்லது ஜீ5 செயலி இல்லாத நுகர்வோர்கள், தூர்தர்ஷனின் டிடி ஸ்போர்ட்ஸ் சேனல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட முக்கியப் போட்டிகளை இலவசமாகக் காணலாம். ஜூன் 11 அன்று மெக்சிகோ மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடக்கும் தொடக்க ஆட்டம், இந்திய நேரப்படி ஜூன் 12 நள்ளிரவு 12:30 மணிக்கு டிடி ஸ்போர்ட்ஸில் இலவசமாக நேரலை செய்யப்படும். இதனைத் தொடர்ந்து, டிடி ஃபிரீ டிஷ் மூலம் நுகர்வோர்கள் ஜூலை 9, 10, 11 ஆகிய தேதிகளில் நடக்கும் குவாட்டர் ஃபைனல் போட்டிகளை இலவசமாகப் பார்க்கலாம். மேலும், ஜூலை 14, 15 தேதிகளில் நடக்கும் அரையிறுதிப் போட்டிகளையும், ஜூலை 19 அன்று நடக்கும் இறுதிப் போட்டியையும் டிடி ஸ்போர்ட்ஸில் முற்றிலும் இலவசமாகக் கண்டு மகிழலாம்.