சுழற்பந்தை எதிர்கொள்ள திணறும் கோலி! நாதன் லியோனை வைத்து ஸ்கெட்ச் போடும் ஆஸ்திரேலியா!
பிப்ரவரி 9 ஆம் தேதி தொடங்கும் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் தொடரில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ள இந்தியா தயாராகி வருகிறது. ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற, இந்தியா குறைந்தபட்சம் 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற வேண்டிய சூழலில், இந்திய அணியின் வெற்றிக்கு விராட் கோலி உறுதுணையாக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், ஆஸ்திரேலியாவின் நாதன் லியோன் விராட் கோலிக்கு சிம்ம சொப்பனமாக திகழ்வார் எனக் கூறப்படுகிறது. டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜேம்ஸ் ஆண்டர்சனும், நாதன் லியோனும் அதிக முறை (7) கோலியை அவுட்டாக்கியுள்ளது தான் இந்த பீதிக்கு காரணம்.இருப்பினும், கோலி லியானுக்கு எதிராக 52.4 ஸ்ட்ரைக் ரேட்டில் 782 பந்துகளில் 410 ரன்கள் குவித்துள்ளார்.
சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக தடுமாறும் விராட் கோலி
104 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள கோலி, 177 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் பேட்டிங் செய்துள்ள நிலையில், அதில் 56 முறை சுழற்பந்து வீச்சாளர்களிடம் வீழ்ந்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் மொத்தமாக, 8,119 ரன்கள் எடுத்திருந்தாலும், சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக 3,409 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அதே சமயம், அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 20 டெஸ்ட் போட்டிகளில் 48.05 சராசரியில் 1,682 ரன்கள் எடுத்துள்ளார். இந்த எண்ணிக்கையில் ஏழு சதங்கள் மற்றும் ஐந்து அரைசதங்கள் அடங்கும். அவரது அதிகபட்ச ஸ்கோர் 169 ஆகும். இந்திய பேட்டர்களில், சச்சின் டெண்டுல்கர் (11), சுனில் கவாஸ்கர் (8) ஆகியோர் மட்டுமே ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கோலியை விட அதிக டெஸ்ட் சதங்களை பெற்றுள்ளனர்.