ஐபிஎல் 2023 : இரண்டாவது முறையாக தவறு செய்த கோலி! இரு மடங்கு அபராதம் விதித்த பிசிசிஐ!
செய்தி முன்னோட்டம்
ராஜஸ்தான் ராயல்ஸ் (ஆர்ஆர்) அணிக்கு எதிரான இன்னிங்ஸின் போது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) மெதுவாக பந்துவீசியதாக அணியின் கேப்டன் விராட் கோலிக்கு ₹24 லட்சம் அபராதம் விதித்து பிசிசிஐ உத்தரவிட்டுள்ளது.
அதே நேரத்தில் அணியின் மற்ற ஒவ்வொரு உறுப்பினருக்கும் ₹6 லட்சம் அல்லது போட்டிக் கட்டணத்தில் 25 சதவீதம் (எது குறைவானதோ) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் 2023 சீசனில் இது ஆர்சிபி அணியின் இரண்டாவது குற்றம் என்பதால், கடந்த முறை விதிக்கப்பட்டதை விட இரு மடங்கு அபராதம் கேப்டனுக்கு விதிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக ஆக்ரோஷமாக நடந்து கொண்டதற்காக கோலிக்கு போட்டிக் கட்டணத்தில் 10 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
actions for slow over rate in ipl
மெதுவாக பந்து வழங்கப்படும் தண்டனை விபரம்
ஐபிஎல்லில் மெதுவாக பந்து வீசினால் அதன் நடத்தை விதிமுறைகளின்படி, முதல் முறை தவறுக்கு கேப்டனுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.
இரண்டாவது முறையாக அதே தவறை செய்யும்போது கேப்டனுக்கு ரூ.24 லட்சமும், இம்பாக்ட் பிளேயர் உட்பட அணியில் மைதானத்தில் விளையாடிய அனைத்து வீரர்களுக்கும் ரூ.6 லட்சம் அல்லது போட்டிக் கட்டணத்தில் 25% (எது குறைவோ) அபராதம் விதிக்கப்படும்.
மூன்றாவது முறை முதல் தொடர்ந்து ஒவ்வொரு முறையும் இதே தவறு நடக்கும்போது, கேப்டனுக்கு ரூ.30 லட்சம் அபராதம் மற்றும் ஒரு போட்டியில் தடை விதிக்கப்படும்.
அதோடு, அணியில் உள்ள வீரர்களுக்கு ரூ.12 லட்சம் அல்லது போட்டிக் கட்டணத்தில் 50 சதவீதம் அபராதம் விதிக்கப்படும்.