'இன்ஸ்டாகிராம் வருமானம் குறித்த தகவல் உண்மையில்லை' : விராட் கோலி மறுப்பு
பிரபல கிரிக்கெட் வீரர் விராட் கோலி இன்ஸ்டாகிராமில் அதிக வருமானம் ஈட்டும் இந்தியர் என தன்னைக் குறித்து வெளியான தகவலை மறுத்துள்ளார். ஹாப்பர் ஹெச்க்யூ நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, விராட் கோலி இன்ஸ்டாகிராமில் ஒரு ஸ்பான்சர் பதிவுக்கு ரூ.11.5 கோடி வசூலிப்பதாக கூறியிருந்தது. இதன் மூலம் அவர் உலக அளவில் 14வது இடத்தில் உள்ளதாகவும், இந்திய அளவில் முதலிடத்தில் உள்ளதாகவும் தெரிவித்திருந்தது. இந்நிலையில் எக்ஸ் (முன்னர் ட்விட்டர்) தளத்தில் விராட் கோலி வெளியிட்டுள்ள ஒரு பதிவில், தனது சமூக வலைதள வருமானம் குறித்து வெளியான செய்திகளில் உண்மையில்லை என தெரிவித்துள்ளார். இதற்கிடையே, ஹாப்பர் ஹெச்க்யூ வெளியிட்டுள்ள அறிக்கையில் நடிகை பிரியங்கா சோப்ராவும் ரூ.4.4 கோடி வருமானத்துடன் 29வது இடத்தில் உள்ளதாக தெரிவித்துள்ளது.