ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாட வேண்டாம் என கோலி முடிவெடுத்துள்ளதாக தகவல்
காலவரையறையின்றி ஒயிட் பால் போட்டிகளில் தன்னை தேர்வு செய்ய வேண்டாம் என்று விராட் கோலி பிசிசிஐக்கு அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம், இந்திய கிரிக்கெட் அணியின் வரவிருக்கும் தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணம் மற்றும் ஜனவரி மாதம் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் அவர் பங்கேற்க மாட்டார் என்பது உறுதியாகியுள்ளது. விராட் கோலி தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளதாகவும், தென்னாப்பிரிக்காவில் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடுவார் என்றும், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாட மாட்டார் என்றும் பிசிசிஐ வட்டாரங்களில் இருந்து தகவல் கசிந்துள்ளது.
இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மாவின் நிலை
விராட் கோலி தனது முடிவை பிசிசிஐ இடம் தெளிவாக அறிவித்துவிட்டதாகக் கூறப்படும் நிலையில், தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தின் ஒயிட்-பால் போட்டிகளில் இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா பங்கேற்பாரா என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை. ஆஸ்திரேலியாவில் நடந்த 2022 டி20 உலகக்கோப்பைக்குப் பிறகு ரோஹித் மற்றும் கோலி இருவரும் டி20 கிரிக்கெட்டில் விளையாடவில்லை. ஆனால் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் அடுத்த டி20 உலகக்கோப்பை இருப்பதால், மீண்டும் அணிக்கு திரும்புவார்களா என்ற பேச்சு எழுந்தது. ஆனால், தற்போதைய நிலவரப்படி, டி20 போட்டிகளில் ரோஹித்தும் கோலியும் இடம்பெற வாய்ப்பில்லை. மேலும், ஒருநாள் போட்டிகளிலும் அவர்களின் எதிர்காலம் இருண்டதாகவே உள்ளது.