
சதமடித்த விராட் கோலி, அரைசதம் விளாசிய ரவிச்சந்திரன் அஷ்வின்
செய்தி முன்னோட்டம்
மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆடி வருகிறது இந்திய கிரிக்கெட் அணி. இந்த போட்டியானது கிங் கோலிக்கு 500வது சர்வதேசப் போட்டியாகவும், இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் விளையாடும் 100வது டெஸ்ட் போட்டியாகவும் அமைந்திருக்கிறது.
முதல் இன்னிங்சில் 182 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து இந்தியா சற்று தடுமாறி வந்த நிலையில், விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவரும் இணைந்து 5-வது விக்கெட்டுக்கு கூட்டணி அமைத்து 159 ரன்களைக் குவித்தனர்.
இந்த முதல் இன்னிங்சில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, டெஸ்ட் போட்டிகளில் தன்னுடைய 29வது சதத்தை விளாசினார் விராட் கோலி. முதல் இன்னிங்சில் கோலி 121 ரன்கள் குவித்திருந்த நிலையில், ரன் அவுட்டில் ஆட்டமிழந்தார்.
கிரிக்கெட்
அரைசதம் விளாசிய ரவிச்சந்திரன் அஷ்வின்:
மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான முதல் இன்னிங்சில் விராட் கோலி ஆட்டமிழந்ததைத் தொடர்ந்து, மற்ற வீரர்களும் நீண்ட நேரம் தாக்குப்பிடிக்காத நிலையில், எட்டாவது வீரராகக் களமிறங்கி 78 பந்துகளில் 56 ரன்களைக் குவித்து அசத்தியிருக்கிறார் இந்த சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின்.
இந்தியா 360/6 என்ற நிலையில் ரவீந்திர ஜடேஜா ஆட்டமிழந்த பிறகு கிரீஸூக்கு வந்த அஷ்வின் எதிரில் இருப்பவர்கள் தொடர்ந்து ஆட்டமிழந்த நிலையிலும், 56 ரன்களைக் குவித்து அசத்தினார்.
இதற்கு முன்னர் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக நான்கு சதங்களை விளாசியிருக்கும் அஷ்வினுக்கு, இது அந்த அணிக்கு எதிரான முதல் அரைசதமாகும். இதுவரை, மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக 13 போட்டிகளில் 608 ரன்களைக் குவித்திருக்கிறார் ரவிச்சந்திரன் அஷ்வின்.