ஐபிஎல்லில் 50 முறை 50+ ஸ்கோர்கள் எடுத்த முதல் இந்தியர்: விராட் கோலி சாதனை
செய்தி முன்னோட்டம்
இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2023 சீசனில் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 2) நடைபெற்ற போட்டியில் விராட் கோலி 82* ரன்கள் எடுத்ததன் மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
மும்பை இந்தியன்ஸ் அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து களமிறங்கிய ஆர்சிபி அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் விராட் கோலி மற்றும் கேப்டன் ஃபாஃப் டு பிளெசிஸ் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 148 ரன்கள் எடுத்தனர்.
டு பிளெசிஸ் 73 ரன்களில் அவுட்டான நிலையில், கோலி கடைசி வரை அவுட்டாகாமல் 82 ரன்கள் எடுத்து அணிக்கு வெற்றியை தேடிக் கொடுத்தார்.
விராட் கோலி
45வது அரைசதத்தை பதிவு செய்த விராட் கோலி
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான 82 ரன்கள் அவரது 45வது அரைசதமாகும் எனும் சூழலில் ஏற்கனவே ஐந்து சதங்களையும் அடித்துள்ளார்.
இந்த அரைசதம் மூலம் கோலி தற்போது ஐபிஎல்லில் 50 ரன்களுக்கு மேல் 50 முறை எடுத்து, இதை செய்த முதல் இந்தியர் என்ற சாதனை படைத்துள்ளார்.
ஐபிஎல்லில் தற்போது கோலியை விட டேவிட் வார்னர் மட்டுமே முன்னிலையில் உள்ளார். சனிக்கிழமையன்று, (ஏப்ரல் 1) வார்னர் 60வது முறையாக 50+ ஸ்கோரை பதிவு செய்தார். இதில் 56 அரைசதங்கள் மற்றும் நான்கு சதங்கள் அடங்கும்.
இதற்கிடையே கோலி ஐபிஎல்லில் 36.04 சராசரியில் 6,706 ரன்கள் எடுத்துள்ளார்.