LOADING...
ராய்ப்பூரில் ருத்ர தாண்டவம்! 14,000 ரன்களைக் கடந்து ஆட்டநாயகன் விராட் கோலி சாதனை; முழு விபரம்
14,000 ரன்களைக் கடந்து ஆட்டநாயகன் விராட் கோலி சாதனை

ராய்ப்பூரில் ருத்ர தாண்டவம்! 14,000 ரன்களைக் கடந்து ஆட்டநாயகன் விராட் கோலி சாதனை; முழு விபரம்

எழுதியவர் Sekar Chinnappan
May 14, 2026
06:34 am

செய்தி முன்னோட்டம்

ராய்ப்பூர் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் 2026 தொடரின் 57வது ஆட்டத்தில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்ணயித்த 193 ரன்கள் என்ற சவாலான இலக்கை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) வெற்றிகரமாகத் துரத்திப் பிடித்தது. லக்னோ மற்றும் மும்பை அணிகளுக்கு எதிரான கடந்த போட்டிகளில் டக்-அவுட் ஆகி விமர்சனங்களுக்கு உள்ளான விராட் கோலி, இந்தப் போட்டியில் தனது முழுத் திறமையையும் வெளிப்படுத்தி 60 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 105* ரன்கள் குவித்தார். அவரது இந்த அதிரடி ஆட்டத்தால், 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆர்சிபி, ஐபிஎல் 2026 புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைப் பிடித்து பிளே-ஆஃப் சுற்றை ஏறக்குறைய உறுதி செய்துள்ளது. மேலும், சிறப்பாக செயல்பட்டு அணியின் வெற்றியை உறுதி செய்ததற்காக ஆட்டநாயகன் விருதும் வென்றார்.

உலக சாதனை

டி20 கிரிக்கெட்டில் 14,000 ரன்களைக் கடந்த முதல் இந்திய வீரர்

தனது அபாரமான இன்னிங்ஸின் போது, விராட் கோலி டி20 கிரிக்கெட்டில் 14,000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டிப் புதிய வரலாறு படைத்துள்ளார். இந்தப் போட்டிக்கு முன்னதாக 78 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், 16-வது ஓவரில் சுனில் நரைன் பந்துவீச்சில் அவர் இந்தச் சாதனையை எட்டினார். இதன் மூலம் 14,000 ரன்களைக் கடந்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். தற்போது 14,027 ரன்களுடன் (409 இன்னிங்ஸ்கள்) இந்திய வீரர்களில் முதலிடத்தில் இருக்கும் கோலிக்கு அடுத்தபடியாக, ரோஹித் ஷர்மா (12,491 ரன்கள்) மற்றும் ஷிகர் தவான் (9,797 ரன்கள்) ஆகியோர் உள்ளனர்.

10வது டி20 சதம்

டேவிட் வார்னரின் சாதனையைச் சமன் செய்து கோலி அசத்தல்

இந்தச் சதத்தின் மூலம் விராட் கோலி டி20 கிரிக்கெட் வரலாற்றில் தனது 10வது சதத்தைப் பதிவு செய்துள்ளார். இதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் ஆஸ்திரேலிய ஜாம்பவான் டேவிட் வார்னரின் சாதனையை (10 சதங்கள்) கோலி சமன் செய்துள்ளார். தற்போது கிறிஸ் கெய்ல் (22 சதங்கள்) மற்றும் பாபர் அசாம் (13 சதங்கள்) ஆகியோருக்கு அடுத்தபடியாக, அதிக சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் கோலி மற்றும் வார்னர் இணைந்து மூன்றாவது இடத்தில் உள்ளனர். ஐபிஎல் தொடரில் மட்டும் இது கோலியின் 9வது சதமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement