Page Loader
ஐசிசி டி20 பந்துவீச்சு தரவரிசையில் 25 இடங்கள் முன்னேறி டாப் 5 வீரர்களில் இடம்பிடித்தார் வருண் சக்ரவர்த்தி
ஐசிசி டி20 தரவரிசையில் டாப் 5 வீரர்களில் இடம்பிடித்தார் வருண் சக்ரவர்த்தி

ஐசிசி டி20 பந்துவீச்சு தரவரிசையில் 25 இடங்கள் முன்னேறி டாப் 5 வீரர்களில் இடம்பிடித்தார் வருண் சக்ரவர்த்தி

எழுதியவர் Sekar Chinnappan
Jan 29, 2025
03:15 pm

செய்தி முன்னோட்டம்

இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி, இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம், சமீபத்திய ஐசிசி டி20 தரவரிசையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளார். ராஜ்கோட்டில் நடந்த மூன்றாவது டி20 போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியது உட்பட முதல் மூன்று போட்டிகளில் வருண் சக்கரவர்த்தி 10 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். செவ்வாய்க்கிழமை (ஜனவரி 28) நடைபெற்ற மூன்றாவது போட்டியில் இந்தியா தோற்றாலும், அவர் 5/24 என்ற சிறப்பான ஆட்டம் மூலம் 83/1 முதல் 127/8 வரை இங்கிலாந்தின் சரிவுக்கு முக்கிய காரணமாக இருந்தார்.

தரவரிசை

தரவரிசையில் முன்னேற்றம்

இந்த சிறப்பான ஆட்டம் மூலம், ஐசிசி டி20 தரவரிசையில் 679 ரேட்டிங் புள்ளிகளுடன், பந்துவீச்சு தரவரிசையில் 25 இடங்கள் முன்னேறி ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளார். இதே தொடரில் சிறப்பாக விளையாடிய இங்கிலாந்தின் அடில் ரஷித் 718 புள்ளிகளுடன் ஒரு இடம் முன்னேறி நம்பர் 1 இடத்தைப் பிடித்துள்ளார். தரவரிசையில் உள்ள மற்ற இந்திய பந்துவீச்சாளர்களில், அர்ஷ்தீப் சிங் 664 புள்ளிகளுடன் எட்டாவது இடத்திலும், ரவி பிஷ்னோய் ஐந்து இடங்கள் சரிந்து 10வது இடத்திலும் உள்ளனர். இந்திய அணியின் துணை கேப்டன் அக்சர் படேல் 11வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். இதற்கிடையே, பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு வரும் திலக் வர்மாவும் டி20 பேட்டிங் தரவரிசையில் ஒரு இடம் முன்னேறி இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார்.