LOADING...
ஐபிஎல் 2026: மீண்டும் ஒரு 15 பந்து அரைசதம்! வைபவ் சூர்யவன்ஷி சாதனை; ஆட்டநாயகன் விருது வென்று அசத்தல்
வைபவ் சூர்யவன்ஷி சாதனை

ஐபிஎல் 2026: மீண்டும் ஒரு 15 பந்து அரைசதம்! வைபவ் சூர்யவன்ஷி சாதனை; ஆட்டநாயகன் விருது வென்று அசத்தல்

எழுதியவர் Sekar Chinnappan
Apr 11, 2026
07:35 am

செய்தி முன்னோட்டம்

ராஜஸ்தான் ராயல்ஸ் (ஆர்ஆர்) அணியின் இளம் அதிசயமான வைபவ் சூர்யவன்ஷி, ஐபிஎல் வரலாற்றில் தனது பெயரைத் தங்க எழுத்துக்களால் பொறித்துள்ளார். வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 10) கௌஹாத்தியின் பார்சபாரா மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில், வெறும் 15 பந்துகளில் அரைசதம் கடந்து வைபவ் அதிரடி காட்டினார். இந்த சீசனில் இது அவருக்கு இரண்டாவது 15 பந்து அரைசதமாகும். இந்த அபார ஆட்டத்திற்காக அவருக்குப் போட்டியின் ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

வரலாற்று சாதனை

மெக்குர்க்கின் சாதனையைச் சமன் செய்த வைபவ்

ஐபிஎல் தொடரில் 15 அல்லது அதற்கும் குறைவான பந்துகளில் இரண்டு முறை அரைசதம் கடந்த இரண்டாவது வீரர் என்ற சாதனையை வைபவ் சூர்யவன்ஷி படைத்துள்ளார். இதற்கு முன்னதாக ஆஸ்திரேலியாவின் ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் (டெல்லி கேப்பிடல்ஸ் - 2024) மட்டுமே இந்தச் சாதனையைச் செய்திருந்தார். வைபவ் இதற்கு முன்னதாக மார்ச் 30 ஆம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலும் இதேபோல் 15 பந்துகளில் அரைசதம் விளாசி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

78 ரன்கள்

ஆர்சிபிக்கு எதிரான சிக்ஸர் மழை

202 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி ஆடிய ராஜஸ்தான் அணிக்கு, இடதுகை ஆட்டக்காரரான வைபவ் மின்னல் வேகத் தொடக்கத்தைக் கொடுத்தார். 26 பந்துகளில் 78 ரன்கள் குவித்த அவர், தனது இன்னிங்ஸில் 8 பவுண்டரிகள் மற்றும் 7 மெகா சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். குறிப்பாக, துருவ் ஜூரெலுடன் இணைந்து இரண்டாவது விக்கெட்டுக்கு வெறும் 37 பந்துகளில் 108 ரன்கள் சேர்த்து ஆர்சிபியின் பந்துவீச்சை நிலைகுலையச் செய்தார். ஒன்பதாவது ஓவரின் முதல் பந்தில் க்ருணால் பாண்டியாவிடம் ஆட்டமிழந்தாலும், அதற்குள்ளாகவே ராஜஸ்தான் அணியின் வெற்றியை அவர் உறுதி செய்துவிட்டார்.

Advertisement

புள்ளிவிபரங்கள்

இளம் வயதில் இமாலய வளர்ச்சி

கடந்த ஆண்டு 14 வயதிலேயே ஐபிஎல்லில் அறிமுகமான வைபவ், இப்போது தனது 11வது போட்டியில் விளையாடி வருகிறார். அவரது புள்ளிவிவரங்கள் பின்வருமாறு:- ஐபிஎல் சராசரி: 41.09 ஸ்டிரைக் ரேட்: 229.44 மொத்த ஐபிஎல் ரன்கள்: 452 (1 சதம், 3 அரைசதங்கள்) ஒட்டுமொத்த டி20 ரன்கள்: 901 (சராசரி 41+) சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியதற்காக 'ஆட்டநாயகன்' விருதைப் பெற்ற வைபவ் சூர்யவன்ஷி, இந்திய கிரிக்கெட்டின் வருங்காலத் தூணாகப் பார்க்கப்படுகிறார்.

Advertisement