இந்திய மல்யுத்த சம்மேளனத்திற்கு தற்காலிக தடை விதித்தது உலக மல்யுத்த கூட்டமைப்பு
உலக மல்யுத்த கூட்டமைப்பு (UWW) இந்திய மல்யுத்த சம்மேளனம் (WFI) உரிய நேரத்தில் தேர்தலை நடத்தாததால் கூட்டமைப்பிலிருந்து நீக்கியுள்ளது. தேர்தல் நடத்தி புதிய பொறுப்பாளர்கள் பொறுப்பேற்கும் வரை இந்திய மல்யுத்த சம்மேளனம் தற்காலிகமாக தடை செய்யப்பட்டதோடு, இந்த தடை உடனடியாக அமலுக்கு வருவதாகவும் தெரிவித்துள்ளது. இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது 8 மாதங்களுக்கும் மேலாக நீடித்து வரும் பாலியல் சர்ச்சை விவகாரத்தால், மல்யுத்த சம்மேளன தலைவர் மற்றும் நிர்வாகிகளுக்கான தேர்தல் பலமுறை ஒத்திவைக்கப்பட்டது. குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் தேர்தலை நடத்தாவிட்டால், அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என முன்னரே உலக மல்யுத்த கூட்டமைப்பும் எச்சரிக்கை விடுத்திருந்தது.
தேர்தலை நடத்துவதில் மீண்டும் தாமதம்
பல சர்ச்சைகளுக்கு மத்தியில், இறுதியாக ஆகஸ்ட் 12 அன்று தேர்தலை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டு அதற்கான விண்ணப்பங்களும் விநியோகிக்கப்பட்டன. மேலும், இதில் தலைவர் பதவிக்கு பிரிஜ் பூஷன் ஷரன் சிங்கின் நெருங்கிய நண்பர் சஞ்சய் சிங் உட்பட நான்கு பேர் விண்ணப்பித்தனர். இந்நிலையில், தேர்தலுக்கு ஒருநாள் முன்னதாக, ஹரியானா மல்யுத்த கூட்டமைப்பு, உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ததால், தேர்தல் மீண்டும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதையடுத்து, தற்போது உலக மல்யுத்த கூட்டமைப்பு தடை விதித்துள்ளது. இந்த தடையால், உலக சாம்பியன்ஷிப் உள்ளிட்ட போட்டிகளில் இந்திய வீரர்கள் அனைவரும், இந்தியர் என்ற அடையாளம் இல்லாமல் தனிநபராக போட்டியில் பங்கேற்க நேரிடும்.