ஆசிய கோப்பை முரண்பாட்டால் அதிருப்தி: இந்தியா வர மறுக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி
ஆசியக் கோப்பை 2023ல் பங்கேற்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அனுமதிக்காவிட்டால், இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் நடைபெற உள்ள ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2023ல் பங்கேற்க மாட்டோம் என பாகிஸ்தான் மீண்டும் மிரட்டியுள்ளது. இந்திய அணி பாதுகாப்பு அச்சுறுத்தல், அரசியல் சூழல் உள்ளிட்ட பல காரணங்களால் நீண்ட காலமாக பாகிஸ்தானில் விளையாடுவதில்லை என்ற கொள்கையை வைத்துள்ளது. இந்நிலையில் 2023 ஆசிய கோப்பை பாகிஸ்தானில் நடந்தால், இந்தியா பங்கேற்காது என பிசிசிஐ அறிவித்தது. இதையடுத்து இந்திய அணி விளையாடும் போட்டிகளை மட்டும் வேறு நாடுகளில் நடுநிலை மைதானங்களில் விளையாட திட்டமிடபப்ட்டு வருகிறது.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை இந்தியா அனுப்ப மறுப்பு
பிசிசிஐ செய்து வரும் இந்த நடவடிக்கையால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மேலும் கடுப்பில் உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு செல்லாமல் நடுநிலை மைதானங்களில் போட்டி நடத்தப்பட்டால், அதற்கு பதிலடியாக பாகிஸ்தானும் ஒருநாள் உலகக்கோப்பைக்கு இந்தியா வந்து விளையாடாமல், இலங்கை அல்லது வங்கதேசம் நடுநிலை மைதானங்களில் தாங்கள் பங்கேற்கும் போட்டிகளை வைத்துக் கொள்ள வலியுறுத்தியுள்ளது. ஒருநாள் உலகக்கோப்பைக்கான போட்டி அட்டவணை இன்னும் வெளியிடப்படாத நிலையில், இது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஐசிசியிடம் லாபி செய்ய ஆரம்பித்துள்ளதாகத் தெரிகிறது. விரைவில் இந்த விவகாரம் ஐசிசியில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும் என கூறப்படுகிறது.