
தென்னாப்பிரிக்கா டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கு புதிய கேப்டன் அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி 2024 பிப்ரவரியில் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.
இந்த தொடருக்கான 14 வீரர்கள் கொண்ட அணியை சனிக்கிழமை (டிசம்பர் 30) தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
இதில் குறிப்பிடத்தக்க அம்சமாக, இதுவரை சர்வதேச போட்டிகளில் விளையாடாத நீல் பிராண்ட் என்ற வீரரை அணியின் கேப்டனாக நியமித்து அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியின் ஒரு பகுதியாக இந்த தொடர் உள்ள நிலையில், சர்வதேச அறிமுகம் இல்லாத ஒருவரின் தலைமையில் அணியை அனுப்புவது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், அதற்கான காரணம் எஸ்ஏ20 லீக் தொடர்தான் எனக் கூறப்படுகிறது.
South Africa Squad for New Zealand Series
தென்னாப்பிரிக்கா அணி வீரர்களின் பட்டியல்
எஸ்ஏ20 லீக் தொடர் ஜனவரி முதல் பிப்ரவரி வரை நடக்க உள்ள நிலையில், அந்த அணியின் பல முக்கிய வீரர்களும் இதில் விளையாட உள்ளனர்.
இதனால், தென்னாப்பிரிக்காவில் முதல் தர கிரிக்கெட்டில் விளையாடிய சிறந்த வீரர்களைக் கொண்டு ஒரு இரண்டாம் தர அணியை நியூசிலாந்துக்கு அனுப்புகிறது.
தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி : நீல் பிராண்ட், டேவிட் பெடிங்ஹாம், ருவான் டி ஸ்வார்ட், க்ளைட் ஃபோர்டுயின், ஜுபைர் ஹம்சா, ட்ஷெபோ மோரேகி, மிஹ்லாலி மபோங்வானா, டுவான் ஆலிவியர், டேன் பேட்டர்சன், கீகன் பீட்டர்சன், டேன் பீட், ரெய்னார்ட் வான் டோண்டர், ஷான் வான் பெர்க் மற்றும் கயா ஜோண்டோ.