மீண்டும் நியூசிலாந்து அணியில் டிரென்ட் போல்ட்? சிஇஓ டேவிட் வைட் தகவல்!
இந்த ஆண்டு இந்தியாவில் நடக்க உள்ள ஒருநாள் உலகக்கோப்பையில் நியூசிலாந்து அணியில் டிரென்ட் போல்ட் இடம் பெறுவார் என தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் மத்திய ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறிய டிரென்ட் போல்ட், டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு அணியில் இருந்தும் நீக்கப்பட்டார். இதன் பிறகு அணியில் அவருக்கு மீண்டும் இடம் கிடைக்காது என கூறப்பட்ட நிலையில், நியூசிலாந்து கிரிக்கெட்டின் தலைமை நிர்வாக அதிகாரி டேவிட் வைட் டிரென்ட் போல்ட் ஒருநாள் உலகக்கோப்பை அணியில் இடம் பெறுவார் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்து கிரிக்கெட் வாரிய சிஇஓ பேசியதன் முழு விபரம்
நியூசிலாந்து கிரிக்கெட்டின் தலைமை நிர்வாக அதிகாரி டேவிட் வைட், "எங்கள் ஒப்பந்த கொள்கைக்கு ஏற்ப நாங்கள் எங்கள் மைய ஒப்பந்த வீரர்களுக்கு முன்னுரிமை அளிப்பது மிகவும் முக்கியம். அதே சமயம் கடந்த சில மாதங்களாக நாங்கள் டிரென்டுடன் நிறைய உரையாடல்களை மேற்கொண்டோம். அவர் உலக கோப்பையில் நியூசிலாந்தை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்றால் நான் மிகவும் ஆச்சரியப்படுவேன். நாங்கள் அவருடன் மிகவும் நேர்மறையான உரையாடல்களை நடத்தி வருகிறோம்." என்று கூறினார். இதற்கிடையே தற்போது ஐபிஎல்லில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வரும் போல்ட்டும், வரவுள்ள ஒருநாள் உலகக்கோப்பையில் நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்காக விளையாட விருப்பம் தெரிவித்துள்ளார். இதனால் அவர் நிச்சயம் அணியில் இடம் பெறுவார் என கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.