டிஎன்பிஎல் 2023 : ஐபிஎல்லை விட அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட தமிழக வீரர் சாய் சுதர்சன்!
டிஎன்பில் 2023 தொடருக்கான வீரர்கள் ஏலத்தில் தமிழகத்தைச் சேர்ந்த சாய் சுதர்சன் ஐபிஎல்லை விட அதிக தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார். டிஎன்பிஎல்லில் இந்த ஆண்டு முதல் முறையாக ஏலத்தின் மூலம் வீரர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். சென்னை அருகே உள்ள மகாபலிபுரத்தில் வீரர்களுக்கான ஏலம் வியாழக்கிழமை (பிப்ரவரி 23) தொடங்கிய நிலையில், முதல் நாள் ஏலத்தில் தமிழகத்தைச் சேர்ந்த சாய் சுதர்சன் ரூ. 21.60 லட்சத்திற்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். முன்னதாக, கடந்த டிசம்பரில் நடந்த ஐபிஎல் மினி ஏலத்தில் சாய் சுதர்சன் குஜராத் டைட்டன்ஸ் அணியால் அடிப்படை விலையான ரூ.20 லட்சத்திற்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ள நிலையில், அதை விட அதிக தொகைக்கு டிஎன்பிஎல்லில் கோவை கிங்ஸ் அணியால் ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.
டிஎன்பிஎல் 2023 வீரர்கள் ஏலம்
2016 இல் தொடங்கிய டிஎன்பிஎல் கிரிக்கெட் லீக், 2020 தவிர்த்து இதுவரை ஆறு ஆண்டுகள் நடத்தப்பட்டு, இந்த ஆண்டு ஏழாவது சீசன் நடத்தப்பட உள்ளது. கடந்த ஆண்டு வரை தமிழ்நாடு கிரிக்கெட் வாரியமே அணிகளுக்கான வீரர்கள் தேர்வை செய்து வந்த நிலையில், இந்த முதல் முறையாக வீரர்கள் ஏல செயல்முறை மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர். மொத்தம் 943 பேர் ஏலத்தில் பங்கேற்றுள்ளனர். இதில் சர்வதேச வீரர்கள், ஐபிஎல் தொடரில் விளையாடும் வீரர்கள் உள்ளிட்ட பல நட்சத்திர வீரர்களும் இடம் பிடித்துள்ளனர். மொத்தம் 8 அணிகள் ஏலத்தில் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் 16 முதல் 20 வீரர்களை வாங்கலாம். அதிகபட்சமாக ரூ.70 லட்சம் வரை செலவிடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.