உள்ளூர் மைதானத்தில் சிஎஸ்கேவின் கடைசி லீக் போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை தொடக்கம்!
ஐபிஎல் 2023 தொடரின் லீக் சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை வெள்ளிக்கிழமை (மே 12) தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இன்னும் இரண்டு போட்டிகள் எஞ்சியுள்ள நிலையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடனான போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் மே 14 ஆம் தேதி நடைபெற உள்ளது. 2023 சீசனின் லீக் சுற்றில் இது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கடைசி உள்ளூர் போட்டியாகும். இதற்கு அடுத்த போட்டி டெல்லியில் விளையாட உள்ளது. இந்நிலையில், போட்டிக்கான டிக்கெட் விற்பனை வெள்ளிக்கிழமை தொடங்க உள்ளது.
டிக்கெட் விற்பனை குறித்த முழு விபரம்
சேப்பாக்கம் மைதானத்தில் வெள்ளிக்கிழமை காலை 7.00 மணி முதல் டிக்கெட்டுகள் கவுன்ட்டரில் நேரடியாக விற்பனை செய்யப்படும். பெண்களுக்கான தனி கவுன்ட்டரில், ஐ,ஜே மற்றும் கே ஸ்டாண்ட் டிக்கெட்டுகள் விற்கப்படும். அதுமட்டுமின்றி, உடல் ஊனமுற்றவர்களுக்கு ரூ.2,500 விலையில் குறிப்பிட்ட அளவு டிக்கெட்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இவற்றை தமிழ்நாடு கிரிக்கெட் சங்க அலுவலகத்தில் காலை 10.30 முதல் 11 மணி வரை பெற்றுக்கொள்ளலாம். இது தவிர பேடிஎம்மின் இன்சைடர் தளத்தின் மூலம் ஆன்லைனில் விற்பனை காலை 9.30 மணிக்கு தொடங்கும். போட்டி தொடங்குவதற்கு மூன்று மணி நேரத்திற்கு முன்பு நுழைவு வாயில்கள் ரசிகர்களுக்காக திறக்கப்படும்.