தி அல்டிமேட் ஜாட்; ஷிகர் தவானுக்கு இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா புகழாரம்
கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக சனிக்கிழமை (ஆகஸ்ட் 24) அறிவித்த ஷிகர் தவானுக்கு இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா புகழாரம் செலுத்தியுள்ளார். 2013இல் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி அவரை பேட்டிங் வரிசையில் முதலிடத்திற்கு உயர்த்தியபோது ரோஹித்தின் தொடக்க கூட்டாளியாக தவான் இருந்தார். இந்த ஜோடி சாம்பியன்ஸ் டிராபியில் மிக சிறப்பான தொடக்கத்தை அமைத்து ஒருநாள் கிரிக்கெட்டில் மிகச்சிறந்த தொடக்க ஜோடிகளின் ஒன்றாக மாறியது. இரு வீரர்களும் வலுவான பிணைப்பை கொண்டிருந்த நிலையில், ரோஹித் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில், "அறைகளைப் பகிர்வது முதல் களத்தில் வாழ்நாள் நினைவுகளைப் பகிர்வது வரை. நீங்கள் எப்போதும் என் வேலையை மறுமுனையில் இருந்து எளிதாக்கினீர்கள். தி அல்டிமேட் ஜாட்." எனக் குறிப்பிட்டுள்ளார்.
ரோஹித் ஷர்மாவின் எக்ஸ் பதிவு
வெற்றிகரமான தொடக்க ஜோடி
2013 முதல் 2022 வரை 115 இன்னிங்ஸ்களில் தொடக்க ஜோடியாக களமிறங்கிய ஷிகர் தவான் மற்றும் ரோஹித் ஷர்மா 5,148 ரன்களை குவித்ததன் மூலம், ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் வரலாற்றில் நான்காவது மிக வெற்றிகரமான ஜோடியாக உள்ளது. ரோஹித் மற்றும் தவானின் அபாரமான கூட்டு, மூன்றாவது இடத்தில் களமிறங்கிய விராட் கோலியின் நிலையான செயல்பாடுகளால் பூர்த்தி செய்யப்பட்டது. இதன் மூலம் இந்திய கிரிக்கெட் அணிக்கு ஒயிட்பால் கிரிக்கெட்டில் இது ஒரு பொற்காலமாக திகழ்ந்தது. 2014 மற்றும் 2019க்கு இடையில், இந்த மூவரும் கூட்டாக அனைத்து வடிவங்களிலும் 100 சதங்களை குவித்துள்ளனர். கூடுதலாக, 2016 டி20 உலகக்கோப்பை மற்றும் 2017 சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதியில் இந்தியாவின் ஆட்டத்தில் அவர்களின் செயல்பாடுகள் முக்கியமானவையாக இருந்தன.