மைதானத்திலேயே முடி வெட்டிக் கொண்ட ஒரே கிரிக்கெட் வீரர் : சுனில் கவாஸ்கரின் சுவாரஷ்ய சம்பவம்
அகமபாத்தில் நடந்து வரும் கடைசி டெஸ்ட் போட்டியின் ஏபிசி வர்ணனை பெட்டியில் இருந்த பேட்டிங் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர், கிட்டத்தட்ட 50 வருடங்களுக்கு முன் நடந்த சுவாரஷ்யமான சம்பவம் ஒன்றை பகிர்ந்து கொண்டார். 1974 ஆம் ஆண்டு இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே இங்கிலாந்தின் ஓல்ட் ட்ராஃபோர்ட் மைதானத்தில் டெஸ்ட் போட்டியை நினைவு கூர்ந்து கவாஸ்கர் பேசினார். அந்த காலகட்டத்தில் நீண்ட சுருள் முடியை கொண்டிருந்த கவாஸ்கர் விளையாட்டிற்கு இடையூறாக இருந்த தனது முடியை, போட்டியின்போது மைதானத்திலேயே வெட்டிக் கொண்டு பேட்டிங் செய்தாக கூறினார். முடிவெட்டிக்கொண்டு பேட்டிங் செய்த கவாஸ்கர், அந்த போட்டியில் 101 ரன்கள் எடுத்தார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, இந்தியா அதில் தோல்வியடைந்தது.
நடுவரிடம் கத்தரிக்கோல் வாங்கி முடிவெட்டிய சுனில் கவாஸ்கர்
கவாஸ்கர் கூறியது பின்வருமாறு :- அந்த நூற்றாண்டில் மான்செஸ்டரில் ஒரு வேடிக்கையிலும் வேடிக்கையான சம்பவம் நடந்தது. அந்த நாட்களில் நான் தொப்பி அணியவில்லை, இப்போது இருப்பதை விட நீண்ட முடி இருந்தது. அதனால் காற்றின் வேகம் என் கண்களில் முடியை வீசியது. இதனால் பந்தை எதிர்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டது. போட்டி நடுவர்கள் பந்தின் ஸ்டிட்ச் கிழிந்தால் சரிசெய்ய கத்தரிக்கோல் வைத்திருப்பர் என்பது எனக்குத் தெரியும் என்பதால் நடுவர் டிக்கி பேர்டிடம் ஏதாவது கத்தரிக்கோல் இருக்கிறதா என்று கேட்டேன். அவர் கத்தரிக்கோலை கொடுத்தவுடன் மைதானத்திலேயே முடியை தேவையான அளவு வெட்டிக்கொண்டேன். இந்த சுவாரஸ்ய தகவலை ஏபிசி ஸ்போர்ட்ஸ் நேயர்களிடம் அவர் கூறினார்.