நேரடியாக தலையிட்ட பிரதமர்! ஓய்வு அறிவிப்பை ஒரேநாளில் வாபஸ் பெற்ற வங்கதேச கேப்டன் தமீம் இக்பால்
வங்கதேச கிரிக்கெட் அணியின் கேப்டன் தமீம் இக்பால் வியாழன் (ஜூலை 6) அன்று சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த நிலையில், ஒரேநாளில் தனது நிலைப்பாட்டை மாற்றியுள்ளார். முன்னதாக, ஆப்கான் கிரிக்கெட் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், வங்கதேச அணி தோல்வியடைந்த நிலையில், யாரும் எதிர்பாராத வகையில், தமீம் இக்பால் ஓய்வை அறிவித்து கிரிக்கெட் உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தினார். மேலும் இது வரவிருக்கும் 2023 ஒருநாள் உலகக்கோப்பைக்கு அணியில் மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என்று கூறப்பட்டது. எனினும், செய்தியாளர் சந்திப்பில் கண்ணீர் மல்க பேசிய தமீம் இக்பால், "இந்த முடிவு பொறுமையாக யோசித்தே எடுக்கப்பட்டது. இப்போது சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறேன்." என்றார்.
ஒரே நாளில் முடிவை மாற்றியதன் பின்னணி
இதையடுத்து லிட்டன் தாஸை உடனடியாக வங்கதேச கிரிக்கெட் வாரியம் கேப்டனாக அறிவித்தாலும், தமீம் இக்பால் ஒருநாள் உலகக்கோப்பையை கருத்தில் கொண்டு முடிவை வாபஸ் பெற வேண்டும் என வலியுறுத்தியது. இதற்கிடையே, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவும் நேரடியாக தமீம் இக்பாலிடம் பேசியுள்ளார். வெள்ளிக்கிழமை (ஜூலை 7) தமீம் இக்பால் தனது மனைவி, முன்னாள் கேப்டன் மஷ்ரஃப் மோர்டாசா மற்றும் வங்கதேச கிரிக்கெட் வாரிய தலைவர் நஸ்முல் ஹாசன் ஆகியோருடன் பிரதமரின் இல்லத்தில் ஷேக் ஹசீனாவை சந்தித்தார். பிரதமரின் தலையீட்டை அடுத்து, ஆகஸ்ட் 31 முதல் தொடங்கும் ஆசியக் கோப்பையின்போது தமீம் இக்பால் மீண்டும் அணிக்கு திரும்புவதாகவும், அதுவரை குடும்பத்துடன் ஓய்வு எடுப்பார் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.