வங்கதேச கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து தமீம் இக்பால் விலகல்
வங்கதேச கிரிக்கெட் அணி வீரர் தமீம் இக்பால், ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். மேலும், முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்த ஆண்டு செப்டம்பரில் நடக்க உள்ள ஆசிய கோப்பையில் இருந்தும் விலகியுள்ளார். மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஆசிய கோப்பை போட்டியில் இருந்து அவர் விலகியுள்ளது அணிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ஜூலை 6 அன்று தமீம் இக்பால் திடீரென அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். எனினும், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவின் தலையீட்டை அடுத்து தனது முடிவை வாபஸ் பெறுவதாக கூறிய நிலையில், தற்போது கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
ஒருநாள் உலகக்கோப்பைக்கு தயாராகும் தமீம் இக்பால்
தமிம் இக்பால் தனது காயத்திற்கு மருத்துவ நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும், காயம் கணிக்க முடியாததாக இருப்பதால், அணியை திறம்பட வழிநடத்துவது கடினமாக உள்ளது என்று கூறியுள்ளார். கேப்டன் பதவியை ராஜினாமா செய்யும் முடிவை பிரதமர் ஹசீனாவிடம் தெரிவித்த தமீம், வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் நஸ்முல் ஹாசன் மற்றும் கிரிக்கெட் ஆபரேஷன்ஸ் தலைவர் ஜலால் யூனுஸ் ஆகியோருடன் ஹாசனின் இல்லத்தில் விரிவான விவாதத்தில் ஈடுபட்டார். அவரது ராஜினாமாவால் ஏற்படும் தாக்கங்களை நிவர்த்தி செய்வது மற்றும் எதிர்காலத்திற்கான அணியின் திட்டம் குறித்து அப்போது விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து, காயத்திலிருந்து மீள சில காலம் ஓய்வெடுத்துவிட்டு, பின்னர் ஒருநாள் உலகக்கோப்பைக்கு தன்னை தயார் செய்ய திட்டமிட்டுள்ளார்.