இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற்ற தமிழக வீரர் கிஷோர் - தேசிய கீதம் இசைத்ததும் கண்கலங்கினார்
சீனா நாட்டின் ஹாங்சோவில் 19வது ஆசிய விளையாட்டு போட்டி நடந்து வருகிறது. இதில் நேபாளம் அணியினை எதிர்கொண்ட இந்தியா, ஆடவர் கிரிக்கெட் காலிறுதி போட்டியில் 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியடைந்து முன்னேறி அரையிறுதிக்கு சென்றுள்ளது. இதனிடையே இந்த போட்டியில் நெடுநாட்களாக இந்திய அணியில் இடம்பெற விரும்பிய தமிழக வீரர் சாய் கிஷோர் இந்திய அணி சார்பில் விளையாட முதன்முறையாக அறிமுகமாகியுள்ளார். இதனால் இப்போட்டியின் துவக்கத்தில் இசைக்கப்பட்ட தேசிய கீதத்தின் போது அவர் ஆனந்த கண்ணீர் வடித்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், அந்த வீடியோ பதிவினை டேக் செய்து தினேஷ் கார்த்திக் தனது எக்ஸ் பக்கத்தில் ஓர் பதிவு செய்துள்ளார்.
தனது முதல் சர்வதேச போட்டியில் 4 ஓவர்கள் பவுலிங் செய்த சாய் கிஷோர்
அதில் அவர்,"டொமெஸ்டிக் கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்திவந்த சாய் கிஷோர் நிஜத்தில் ஓர் சூப்பர் ஸ்டார். அவரைப்பற்றி நினைத்தால் எனக்கு ஏற்படும் மகிழ்ச்சியினை என்னால் கட்டுப்படுத்த முடியாது" என்றும், "இன்று காலை ஆடும் லெவனில் அவரது பெயரை பார்த்ததும் உணர்ச்சிவசப்பட்டேன்" என்றும் பதிவிட்டுள்ளார். மேலும், சாய் தனது பேட்டிங் முறையினை மேம்படுத்திய விதமே அவரது திறமை குறித்து அனைத்தையும் சொல்லும். திறமைகள் இருந்தும் இந்திய அணியில் விளையாட வாய்ப்பு கிடைக்காமல் இருந்த சாய் கிஷோர் இந்திய அணியில் இடம்பெற எவ்வித வடிவத்திலும் விளையாட தன்னைத்தானே மாற்றிக்கொண்டார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே தனது முதல் சர்வதேச போட்டியில் 4 ஓவர்கள் பவுலிங் செய்த சாய், 26 ரன்களை விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டை பெற்றது குறிப்பிடத்தக்கது.