மூன்று நாட்களுக்கு முன் இறந்த பாட்டிக்கு சாதனையை அர்ப்பணித்த இந்திய வீரர் தஜிந்தர்பால் சிங் டூர்
புவனேஸ்வரில் நடந்த தேசிய சீனியர் சாம்பியன்ஷிப் தடகள போட்டியில், தஜிந்தர்பால் சிங் டூர் குண்டு எறிதலில் 21.77 மீட்டர் தூரத்தை எட்டி புதிய தேசிய சாதனையை படைத்ததோடு, ஆசிய சாதனையையும் முறியடித்துள்ளார். தஜிந்தர்பால் சிங் இந்த சாதனையால் மகிழ்ச்சியடைந்தாலும், மிகப்பெரிய அளவில் கொண்டாட்டங்கள் எதுவும் இல்லை. வெற்றி பெற்றாலும், தான் மகிழ்ச்சியாக இல்லை என தஜிந்தர்பால் சிங் கூறுகிறார். இது குறித்து போட்டிக்கு பின்பு பேசிய அவர், "என் பாட்டி மூன்று நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இங்கு வர எனக்கு விருப்பம் இல்லை என்றாலும், வந்து விளையாட வேண்டிய கட்டாயத்தில் இருந்தேன். இறுதியில் நான் சாதனையை முறியடித்ததை உணர்ந்தபோது, கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டேன். இந்தப் போட்டியை என் பாட்டிக்கு அர்ப்பணிக்க விரும்புகிறேன்." எனத் தெரிவித்துள்ளார்.
இரண்டு வருடங்களாக பின்னடைவை சந்தித்து வரும் தஜிந்தர்பால் சிங்
காயத்தினால் ஏற்படும் பின்னடைவுகள் தவிர தனிப்பட்ட சோகங்களாலும் கூட குண்டு எறிதல் வீரர் தஜிந்தர்பால் சிங் கடந்த இரண்டு ஆண்டுகளாக கடினமான நிலையை எதிர்கொண்டு வருகிறார். 2021 இல் 21.49மீ தூரம் வீசி தேசிய சாதனை படைத்து டோக்கியோ ஒலிம்பிக்கிற்கும் தகுதி பெற்றார். டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், போட்டிக்கு முன்னதாக அவரது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டதால், விலக வேண்டிய நிலை உருவானது. மேலும் கடந்த ஆண்டு உலக சாம்பியன்ஷிப் மற்றும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளைத் தவறவிட்டார். அதன்பிறகு டிசம்பரில் அவரது மனைவி கர்ப்பத்தில் ஏற்பட்ட சிக்கலால் கருக்கலைப்பு செய்ய நேரிட்டது. அனைத்து துரதிர்ஷ்டங்கள் இருந்தபோதிலும், தஜிந்தர் தொடர்ந்து தனது விளையாட்டு திறனை மேம்படுத்தி வருவதை நிறுத்தவில்லை.