டி20 உலகக்கோப்பை 2026: ஸ்டார் பேட்டராக இருந்தும் இதுவரை ஏமாற்றம் அளித்த டாப் 3 பேட்டர்கள்
செய்தி முன்னோட்டம்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்தியா, தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகள் தோல்வியே அடையாமல் சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளன. அதேசமயம், பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் களமிறங்கிய சில முன்னணி வீரர்கள் லீக் சுற்றில் ரன் குவிக்கத் தவறியது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள 3 முக்கிய வீரர்கள் இதோ:
அபிஷேக் ஷர்மா
இந்தியாவின் நட்சத்திர பேட்டர் அபிஷேக் ஷர்மா
இந்த உலகக்கோப்பையில் இந்திய கிரிக்கெட் அணியின் மிகப்பெரிய பலமாகப் பார்க்கப்பட்டவர் அதிரடி மன்னன் அபிஷேக் ஷர்மா. ஆனால், துரதிர்ஷ்டவசமாக இதுவரை விளையாடிய மூன்று போட்டிகளிலும் (அமெரிக்கா, பாகிஸ்தான், நெதர்லாந்து) ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆகி மோசமான சாதனையைப் படைத்துள்ளார். பவர்-பிளே ஓவர்களில் ஸ்பின்னர்களுக்கு எதிராக அவர் திணறுவது இந்திய அணிக்குக் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், சூப்பர் 8 சுற்றில் அவர் ஃபார்முக்கு திரும்புவார் என ரசிகர்கள் நம்புகின்றனர்.
பாபர் அசாம்
பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் பாபர் அசாம்
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் நட்சத்திர வீரருமான பாபர் அசாம், இந்தத் தொடரில் மிகவும் மந்தமாக விளையாடி வருகிறார். மூன்று இன்னிங்ஸ்களில் அவர் எடுத்துள்ள ரன்கள் வெறும் 66 மட்டுமே. குறிப்பாக, 115.78 என்ற அவரது ஸ்டிரைக் ரேட் நவீன கால டி20 கிரிக்கெட்டிற்குப் போதுமானதாக இல்லை என விமர்சனங்கள் எழுந்துள்ளன. நமீபியாவுக்கு எதிரான கடைசி லீக் போட்டியில் அவருக்கு பேட்டிங் செய்ய வாய்ப்பு வழங்கப்படவில்லை. சூப்பர் 8 சுற்றில் அவர் தனது பழைய அதிரடிக்குத் திரும்பாவிட்டால், அணியில் அவரது இடத்திற்கே ஆபத்து ஏற்படலாம்.
ஜோஸ் பட்லர்
இங்கிலாந்தின் ஜோஸ் பட்லர்
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஜோஸ் பட்லர், ஆசிய மண்ணில் அதிக அனுபவம் கொண்டவர். ஆனால், இந்த உலகக்கோப்பையில் 4 போட்டிகளில் விளையாடி வெறும் 53 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இங்கிலாந்து அணி தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழப்பதற்கு பட்லரின் ஃபார்ம் இல்லாததும் ஒரு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது. இங்கிலாந்து அணி அரையிறுதிக்கு செல்ல வேண்டுமென்றால், ஜோஸ் பட்லர் தனது அனுபவமான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டியது அவசியம்.