LOADING...
நமீபியாவுடன் 'டூ ஆர் டை' போர்! சூப்பர் 8 சுற்றில் இந்தியா- பாகிஸ்தான் மீண்டும் மோதுமா? ரசிகர்களுக்கு காத்திருக்கும் ட்விஸ்ட்
சூப்பர் 8 சுற்றில் இந்தியா- பாகிஸ்தான் மீண்டும் மோதுமா?

நமீபியாவுடன் 'டூ ஆர் டை' போர்! சூப்பர் 8 சுற்றில் இந்தியா- பாகிஸ்தான் மீண்டும் மோதுமா? ரசிகர்களுக்கு காத்திருக்கும் ட்விஸ்ட்

எழுதியவர் Venkatalakshmi V
Feb 18, 2026
02:33 pm

செய்தி முன்னோட்டம்

கொழும்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற டி20 உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில், பாகிஸ்தானை 61 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி கெத்தாக சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இஷான் கிஷனின் அதிரடி 77 ரன்கள் மற்றும் பந்துவீச்சாளர்களின் துல்லியமான தாக்குதலால் இந்தியா 175 ரன்கள் குவித்ததுடன், பாகிஸ்தானை 114 ரன்களில் சுருட்டியது. இந்தியாவிடம் தோற்றதால் பாகிஸ்தான் அணி தற்போது நெருக்கடியில் உள்ளது. இன்று கொழும்பு சிங்கள ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெறவுள்ள நமீபியாவுக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் கட்டாயம் வெற்றி பெற வேண்டும். ஒருவேளை மழையாலோ அல்லது தோல்வியாலோ பாகிஸ்தான் புள்ளிகளை இழந்தால், அவர்கள் தொடரிலிருந்து வெளியேறுவார்கள். அப்படி நடந்தால், அமெரிக்க அணி (USA) அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.

போட்டி

இந்தியா -பாகிஸ்தான் மீண்டும் மோதுமா?

ரசிகர்களின் எதிர்பார்ப்பு என்னவோ மீண்டும் ஒரு 'இந்தியா - பாக்' மோதல் தான். ஆனால், அது அவ்வளவு எளிதல்ல. சூப்பர் 8 சுற்றை பொறுத்தவரை இந்தியா 'குரூப் 1'-லும், பாகிஸ்தான் (தகுதி பெற்றால்) 'குரூப் 2'-லும் இடம்பெறும். எனவே, இந்த சுற்றில் இரு அணிகளும் நேருக்கு நேர் மோத வாய்ப்பில்லை. இரு அணிகளும் தத்தமது பிரிவுகளில் முதல் இரண்டு இடங்களை பிடித்தால் மட்டுமே அரைஇறுதி அல்லது மார்ச் 8-ம் தேதி நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் சந்திக்க வாய்ப்பு உருவாகும். நமீபியா அணி ஏற்கனவே இந்தத் தொடரிலிருந்து வெளியேறிவிட்டாலும், கடந்த காலங்களில் தென் ஆப்பிரிக்கா போன்ற பெரிய அணிகளுக்கு அதிர்ச்சி அளித்த வரலாறு அவர்களுக்கு உண்டு. எனவே, பாகிஸ்தான் இன்றைய போட்டியை மிகுந்த எச்சரிக்கையுடனே எதிர்கொள்ளும்.

Advertisement