சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் : பி.வி.சிந்து, ஹெச்.எஸ் பிரணாய் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேற்றம்
சுவிஸ் ஓபன் சூப்பர் 300 பேட்மிண்டன் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்திய நட்சத்திர வீரர் ஹெச்.எஸ் பிரணாய் ஆல் இங்கிலாந்து சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியாளர் சீனாவின் ஷி யூ கியை வீழ்த்தி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். ஆடவர் ஒற்றையர் பிரிவு தொடக்கச் சுற்றில் 2018ஆம் ஆண்டு உலக சாம்பியன்ஷிப் வெள்ளிப் பதக்கம் வென்ற ஷி யூ கியை எதிர்த்து 21-17 19-21 21-17 என்ற கணக்கில் பிரணாய் வெற்றி பெற்றார். உலகின் 9ஆம் நிலை வீரரான பிரணாய் முதல் கேமில் வெற்றி பெற்று இரண்டாவது கேமில் சரிந்தாலும், பின்னர் மீண்டு வந்து ஷி யூ கியை வீழ்த்தி ரவுண்ட் 16 சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
நேர் செட் கணக்கில் வெற்றி பெற்ற பிவி சிந்து
இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்றவரும், நான்காம் நிலை வீராங்கனையுமான பி.வி.சிந்து மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் சுவிட்சர்லாந்தின் ஜென்ஜிரா ஸ்டேடல்மேனை 21-9, 21-16 என்ற நேர் செட் கணக்கில் தோற்கடித்தார். இதன் மூலம் சிந்துவும் காலிறுதிக்கு முந்தைய சுற்றான ரவுண்ட் 16 சுற்றுக்கு முன்னேறியுள்ளார். ரவுண்ட் 16 சுற்றில் பிரணாய் அடுத்ததாக பிரான்சின் கிறிஸ்டோ போபோவை எதிர்கொள்கிறார். சிந்து 2022 ஆசிய அணி சாம்பியன்ஷிப்பின் தங்கப் பதக்கம் வென்ற இந்தோனேசியாவின் புத்ரி குசுமா வர்தானியை எதிர்கொள்கிறார். இதற்கிடையே, கிடாம்பி ஸ்ரீகாந்த், மிதுன் மஞ்சுநாத், சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி-சிராக் ஷெட்டி ஜோடி ஆகியோர் முதல் சுற்றில் வியாழக்கிழமை (மார்ச் 23) விளையாட உள்ளனர்.