ஐசிசி டி20 பேட்டிங் தரவரிசை : புதிய உச்சத்தை நோக்கி சூர்யகுமார் யாதவ்!
சமீபத்திய ஐசிசி டி20 கிரிக்கெட் தரவரிசையில் சூர்யகுமார் யாதவ் தனது கிரிக்கெட் வாழ்க்கையின் உயர் தரவரிசையை எட்டியுள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான தொடரின் தொடக்க ஆட்டத்தில் மிஸ்டர் 360 டிகிரி சூர்யகுமார் 47 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் அவர் தரவரிசையில், 910 புள்ளிகளை எட்டினார். சூர்யகுமார் இரண்டாவது டி20இல் 26* ரன்கள் எடுத்தாலும், அவர் 908 ரேட்டிங் புள்ளிகளுக்கு பின்டைவை சந்தித்தார். இந்நிலையில், இந்த பின்னடைவை பொருட்படுத்தாமல், அவர் ஆல் டைம் டி20 தரவரிசையில் உலக சாதனையை நெருங்கி வருகிறார். நியூசிலாந்துக்கு எதிரான கடைசி போட்டியில், இன்று (பிப்ரவரி 1) அகமதாபாத்தில் அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைத்தால், உலக சாதனை படைக்க வாய்ப்பு உள்ளது.
ஐசிசி டி20 தரவரிசையில் அதிக ரேட்டிங் புள்ளிகள் சாதனை
2020 இல் கேப் டவுனில் 915 புள்ளிகள் என்ற உச்சத்தை இங்கிலாந்து வீரரான டேவிட் மலன் எட்டியுள்ளார். இதுவே தற்போதுவரை டி20 தரவரிசையில், ஒரு வீரரின் அதிகபட்ச ரேட்டிங் புள்ளியாக உள்ளது இந்த பட்டியலில் சூர்யகுமார் 910 புள்ளிகள் வரை சென்று இரண்டாம் இடத்திலும், ஆரோன் ஃபின்ச் 900 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளார். 30 வயதை கடந்த பிறகு மிக தாமதமாகவே இந்திய அணியில் 2021இல் நுழைந்த சூர்யகுமார், டி20யில் ஒரு காலண்டர் ஆண்டில் 1,150+ ஸ்கோர்களை பதிவு செய்த முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார். 2022 ஐசிசி டி 20 உலகக் கோப்பையில் 59.75 சராசரியுடன் 239 ரன்கள் குவித்த பிறகு ஐசிசி தரவரிசையில் முதலிடத்தை பெற்றது குறிப்பிடத்தக்கது.