விராட் கோலிக்கு பதிலாக சூர்யகுமார் யாதவ்; வங்கதேசத்திற்கு எதிரான இந்திய அணியில் மாற்றம் எனத் தகவல்
ஆசிய கோப்பை 2023 தொடரின் சூப்பர் 4 சுற்றில் தொடர்ச்சியாக 3 நாட்கள் விளையாடிய இந்திய அணி, இரண்டு நாள் ஓய்வுக்கு பிறகு வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 15) வங்கதேச கிரிக்கெட் அணியை எதிர்கொள்ள உள்ளது. இந்திய அணி ஏற்கனவே பாகிஸ்தான் மற்றும் இலங்கையை தோற்கடித்து இறுதிப்போட்டி வாய்ப்பை உறுதி செய்துள்ள நிலையில், இந்த போட்டியை இறுதிப்போட்டிக்கு முந்தைய பயிற்சிக்களமாகவே இந்தியா எதிர்கொள்ளும் எனத் தெரிகிறது. அதே சமயத்தில் ஆசிய கோப்பை 2023 தொடரில் இந்தியா வங்கதேசத்தை எதிர்கொள்ளும் முதல் போட்டி இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே, இந்த போட்டியில் சில வீரர்களுக்கு ஓய்வளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கேப்டனாக ரோஹித் ஷர்மாவே தொடர்வார் என தகவல்
கடந்த சில தொடர்களைப் போல் அல்லாமல், முக்கியத்துவம் இல்லாத போட்டியாக இருந்தாலும், இந்திய கிரிக்கெட் அணிக்கு இந்த போட்டியில் ரோஹித் ஷர்மாவே கேப்டனாக தொடர்வார் எனக் கூறப்படுகிறது. தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோஹித் ஷர்மாவுடன் ஷுப்மன் கில் களமிறங்குவார் எனக் கூறப்படும் நிலையில், விராட் கோலிக்கு பதிலாக மூன்றாவது இடத்தில் சூர்யகுமார் யாதவ் களமிறக்கப்பட வாய்ப்புள்ளது. மேலும், முதுகு வலியால் விலகியிருந்த ஷ்ரேயாஸ் ஐயர் இந்த போட்டியில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் பந்துவீச்சில் ஷர்துல் தாக்கூருக்கு ஓய்வளிக்கப்பட்டு, அக்சர் படேல் அணியில் சேர்க்கப்படலாம் மற்றும் பும்ராவுக்கு பதிலாக ஷமி களமிறக்கப்படலாம் எனத் தெரிகிறது.