டி20 கேப்டன்சி அறிமுகத்தில் அதிக ரன்களைக் குவித்து சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்த சூர்யகுமார் யாதவ்
கடந்த நவம்பர் 19ம் தேதி நடைபெற்று முடிந்த ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு அடுத்தபடியாக நேற்று ஆஸ்திரேலிய அணிக்கெதிரான ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் விளையாடியது இந்திய கிரிக்கெட் அணி. ஒருநாள் உலகக்கோப்பை போட்டிகளில் விளையாடியவர்களில் சூர்யகுமார் யாதவ் மட்டுமே நேற்றை போட்டியிலும் பங்கெடுத்தார். கடந்த உலகக்கோப்பைத் தொடரில் மிக மோசமாக விளையாடி சூர்யகுமார் யாதவ், முக்கியமான இறுதிப்போட்டியிலும் வெறும் 18 ரன்களை மட்டுமே குவித்திருந்தார். ஆனால், நேற்றைய போட்டியில் கேப்டனாகக் களமிறங்கி கிட்டத்தட்ட 200 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் 80 ரன்களைக் குவித்திருக்கிறார் அவர். இத்துடன் பல்வேறு சாதனகளையும் படைத்திருக்கிறார் சூர்யகுமார் யாதவ். அவை என்னனென்ன என்று பார்த்துவிடுவோம்.
இந்திய டி20 அணியின் 13வது புதிய கேப்டன்:
நேற்று ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக வெறும் பேட்டராக மட்டுமின்றி புதிய கேப்டனாகவும் அணியை வழிநடத்தினார் சூர்யகுமார் யாதவ். இந்திய டி20 அணியின் 13வது கேப்டனாக அணியை வழிநடத்தியிருக்கிறார் அவர். முன்னதாக, வீரேந்திர சேவாக், மகேந்திர சிங் தோனி, சுரேஷ் ரெய்னா, அஜிங்கிய ரகானே, விராட் கோலி, ரோகித் ஷர்மா, ஷிகர் தவான், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா, கே.எல்.ராகுல், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ருதுராஜ் கெயிக்வாட் ஆகியோர் டி20 ஃபார்மெட்டில் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டிருக்கிறார்கள். முக்கியமாக 2021ம் ஆண்டுக்குப் பிறகு இந்திய அணியை வழிநடத்திய கேப்டன்கள் பட்டியலில் ஒன்பதாவதாக இணைகிறார் சூர்யகுமார் யாதவ்.
கேப்டனாக முதல் போட்டியில் அதிக ரன்கள்:
இந்திய டி20 அணியின் கேப்டனாக அறிமுகமாகும் போட்டியில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற புதிய சாதனையைப் படைத்திருக்கிறார் சூர்யகுமார் யாதவ். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் 209 ரன்களை சேஸ் செய்யும் இந்திய அணி 22 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய போது, 42 ரன்களில் 80 ரன்களைக் குவித்து அணியின் ஸ்கோரை சரசரவென உயர்த்தி இத்தொடரில் இந்திய அணியின் முதல் வெற்றிக்கு வித்திட்டிருக்கிறார் சூர்யகுமார். முன்னதாக, டி20 கேட்னாக அறிமுகமான போட்டியில் 2022ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிராக 62 ரன்களைக் குவித்து, டி20 கேப்டன்சி அறிமுகத்தின் போது அதிக ரன்களைக் குவித்த வீர்ர என்ற பெருமையை கே.எல்.ராகுல் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
13வது மேன் ஆஃப் தி மேட்ச் விருது:
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்திற்காக மேம் ஆஃப் தி மேட்ச் விருதையும் வென்றார் சூர்யகுமார் யாதவ். டி20 போட்டிகளில் இந்திய அணியின் சார்பாக சூர்யகுமார் யாதவ் பெறும் 13வது மேன் ஆஃப் தி மேட்ச் விருது இது. இந்த விருதுடன், சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் அதிக மேன் ஆஃப் தி மேட்ச் விருது வென்றவர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியிருக்கிறார் சூர்யகுமார் யாதவ். 15 விருதுகளுடன் முதலிடத்தில் விராட் கோலியும், 14 விருதுகளுடன் இரண்டாவது இடத்தில் ஆஃப்கானிஸ்தான் வீரர் முகமது நபியும் இடம் பிடித்திருக்கின்றனர்.
சர்வதேச டி20 போட்டிகளில் சூர்யகுமார் யாதவ்வின் செயல்பாடுகள்:
இதுவரை சூர்யகுமார் யாதவ் விளையாடிய சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அவரது செயல்பாடுகள் கேள்விக்குறியாகவே இருந்து வந்திருக்கின்றன. ஆனால், டி20 போட்டிகளில் இந்திய அணியின் அறிமுகத்துக்குப் பிறகு அவரது செயல்பாடுகள் சிறப்பாகவே இருந்து வந்திருக்கின்றன. 2021 மார்ச் மாதம் இந்திய டி20 அணியில் அறிமுகமான பிறகு, 54 போட்டிகளில் 1,921 ரன்களைக் குவித்திருக்கிறார்க சூர்யகுமார் யாதவ். அவர் விளையாடி அனைத்து சர்வதேச டி20 போட்டிகளிலும் அவரது ஸ்ட்ரைக் ரேட் குறைந்தபட்சம் 150-க்கு மேலேயே இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. ஒட்டுமொத்தமாக சர்வதேச டி20 போட்டிகளில் 173.37 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் 46.85 என்ற சராசரியைக் கொண்டிருக்கிறார் அவர். மேலும், சர்வேதச டி20 போட்டிகளில் மூன்று சதங்கள் மற்றும் 16 அரைசதங்களையும் விளாசியிருப்பது குறிப்பிடத்தக்கது.