ஐரோப்பாவில் இந்திய உணவகத்தை திறந்தார் சுரேஷ் ரெய்னா
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா, நெதர்லாந்து நாட்டில் உள்ள ஆம்ஸ்டர்டாமில் பிரமாண்டமான இந்திய உணவகத்தை திறந்துள்ளார். உணவு மற்றும் சமையல் மீதான சுரேஷ் ரெய்னாவின் ஆர்வம் அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் கிரிக்கெட் வாழ்க்கைக்கு பிறகு அது சார்ந்த தொழிலில் தனது கவனத்தை செலுத்தி வருகிறார். அந்த வகையில், நெதர்லாந்தில் அனைத்து வகையான இந்திய உணவுகளையும் வழங்கும் உணவகத்தை தொடங்கியதோடு, இது குறித்து ட்விட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், "ஆம்ஸ்டர்டாமில் ரெய்னா இந்தியன் உணவகத்தை அறிமுகப்படுத்துவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள சுவையை ஐரோப்பாவிற்கு கொண்டுவரும் பணியில் ஈடுபட்டுள்ளேன்." எனத் தெரிவித்துள்ளார். மேலும் இந்த பதிவுடன் ரெய்னா இந்தியன் உணவகம் தொடர்பான புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.