சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் புதிய பயிற்சியாளராக டேனியல் வெட்டோரி நியமனம்
ஐபிஎல் அணிகளில் ஒன்றான சன்ரைசர்ஸ் ஹைதராபாத், அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக டேனியல் வெட்டோரியை நியமித்துள்ளது. முன்னதாக, அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் ஜாம்பவானான பிரையன் லாராவுடனான இரண்டு ஆண்டு ஒப்பந்தம் 2023 உடன் முடிவுக்கு வந்தது. ஐபிஎல் 2023 சீசனில், சன்ரைசர்ஸ் அணி படுதோல்வியுடன் வெளியேறிய நிலையில், லாராவுடனான ஒப்பந்தத்தை புதுப்பிக்க விரும்பாத சன்ரைசர்ஸ், புதிய பயிற்சியாளரை தேடி வந்ததது. இந்நிலையில், தற்போது நியூசிலாந்து ஜாம்பவான் டேனியல் வெட்டோரியை புதிய தலைமை பயிற்சியாளராக அறிவித்துள்ளது. இவர் ஐபிஎல்லில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடியுள்ளதோடு, அந்த அணியின் பயிற்சியாளராகவும் 2014 முதல் 2018 வரை இருந்துள்ளார்.
ஆறு சீசன்களில் நான்கு தலைமை பயிற்சியாளர்களை கண்ட சன்ரைசர்ஸ்
சன்ரைசர்ஸ் அணி ட்விட்டரில் வெளியிட்ட ஒரு பதிவில், "பிரையன் லாராவுடனான எங்கள் 2 ஆண்டுகால தொடர்பு முடிவுக்கு வருவதால், நாங்கள் அவரிடமிருந்து விடைபெறுகிறோம். சன்ரைசர்ஸ் அணிக்கு அளித்த பங்களிப்புகளுக்கு நன்றி. உங்கள் எதிர்கால முயற்சிகளுக்கு நாங்கள் நல்வாழ்த்துக்கள்." தெரிவித்துள்ளது. இதற்கிடையே, ஐபிஎல்லில் தொடர்ந்து மோசமான செயல்திறனை வெளிப்படுத்தி வரும் சன்ரைசர்ஸ் அணி, தற்போது தொடர்ந்து மூன்று சீசன்களில் பிளேஆஃப் சுற்றுக்குச் செல்லவில்லை. குறிப்பிடத்தக்க வகையில், கடைசி ஆறு சீசன்களில் சன்ரைசர்ஸ் அணி நான்கு தலைமைப் பயிற்சியாளர்களை பெற்றுள்ளது. டாம் மூடி 2019 மற்றும் 2022லும், ட்ரெவர் பெய்லிஸ் 2020 மற்றும் 2021லும் தலைமைப் பயிற்சியாளராக இருந்த நிலையில், 2023இல் லாராவும் தலைமைப் பயிற்சியாளராக இருந்தார். 2024 சீசனில் வெட்டோரி தலைமையேற்க உள்ளார்.