ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் கேப்டனாக்கியது ஏன்? சுனில் கவாஸ்கர் விளக்கம்
இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2024 சீசனுக்கு முன்னதாக மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து ரோஹித் ஷர்மா நீக்கப்பட்டு ஹர்திக் பாண்டியா புது கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். முன்னதாக, 2023 ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியை ரோஹித் ஷர்மா அபாரமாக வழிநடத்தினாலும், இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்து பட்டம் வெல்லும் வாய்ப்பை இழந்தது. 2022 டி20 உலகக்கோப்பையில் தோல்வி அடைந்த பிறகு இந்திய அணிக்காக டி20 தொடரில் விளையாடாத ரோஹித் ஷர்மா, தற்போது ஒருநாள் உலகக்கோப்பை தோல்விக்கு பிறகு நடக்கும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் விளையாடவில்லை. இதைத் தொடர்ந்து தற்போது மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பதவி அவரிடமிருந்து பறிக்கப்பட்டுள்ளது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
மும்பை இந்தியன்ஸ் கேப்டன் மாற்றம் குறித்து சுனில் கவாஸ்கர் கருத்து
மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் மாற்றம் குறித்து பேசிய இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர், இதில் சரி மற்றும் தவறு போன்ற விவாதம் எதுவும் தேவையில்லை எனத் தெரிவித்துளளார். அவர் மேலும் கூறுகையில், அவர்கள் எடுத்த முடிவு அணியின் நலனுக்கானது என்றும், ஐபிஎல்லில் மட்டுமல்லாது சர்வதேச கிரிக்கெட்டிலும் தலைமைப் பொறுப்புகள் இருப்பதால் ரோஹித் ஷர்மா சோர்வாக இருப்பதாகத் தோன்றியதால் மும்பை இந்தியன்ஸ் இந்த முடிவை எடுத்ததாக தெரிவித்துள்ளார். மேலும், கடந்த இரண்டு சீசன்களில் மும்பை இந்தியன்ஸ் சிறப்பாக செயல்படாத நிலையில், ஹர்திக் பாண்டியா அணிக்குள் புதிய சிந்தனையை கொண்டுவருவது அணிக்கு பயனளிக்க மட்டுமே செய்யும் என நம்புவதாக தெரிவித்தார்.