டெஸ்ட் கிரிக்கெட்டில் 31வது சதமடித்து ஹைடனின் சாதனையை முறியடித்த ஸ்டீவ் ஸ்மித்
செய்தி முன்னோட்டம்
லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்து வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியாவுக்கு எதிராக ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் சதமடித்தார்.
ஸ்டீவ் ஸ்மித் முதல் நாள் முடிவில் 95 ரன்களுடன் களத்தில் இருந்த நிலையில், இரண்டாம் நாளில் வியாழக்கிழமை (ஜூன் 8), 100 ரன்களை எட்டி தனது 31வது சதத்தை பதிவு செய்து 121 ரன்களில் அவுட்டானார்.
இதன் மூலம் மேத்யூ ஹெய்டனை பின்னுக்குத் தள்ளி ஆஸ்திரேலியாவுக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் மூன்றாவது அதிக சதமடித்த வீரர் ஆனார்.
முதலிடத்தில் 41 சதங்களுடன் ரிக்கி பாண்டிங்கும், இரண்டாவது இடத்தில் 32 சதங்களுடன் ஸ்டீவ் வாக்கும் உள்ளனர்.
steve smith to reach 9000 test runs
டெஸ்ட் கிரிக்கெட்டில் 9,000 ரன்களை நெருங்கும் ஸ்டீவ் ஸ்மித்
குறிப்பிடத்தக்க வகையில், தற்போது விளையாடும் வீரர்களில் ஸ்மித்தை விட அதிக டெஸ்ட் சதங்களை வேறு எந்த வீரரும் வைத்திருக்கவில்லை. இந்த பட்டியலில் 29 டெஸ்ட் சதங்களை அடித்து ஸ்மித்துக்கு அடுத்தபடியாக இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ஜோ ரூட் உள்ளார்.
ஸ்மித்தின் ஒட்டுமொத்த டெஸ்ட் ரன்களை பொறுத்தவரை தற்போது 97 டெஸ்டில் 8,911 ரன்களை 60.61 என்ற சராசரியில் அடித்துள்ளார்.
குறைந்தபட்சம் 5,000 டெஸ்ட் ரன்களை எடுத்துள்ள பேட்டர்களில், சர் டொனால்ட் பிராட்மேன் (99.94) மட்டுமே ஸ்டீவ் ஸ்மித்தை விட சிறந்த சராசரியை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், ஸ்மித் டெஸ்டில் 37 அரைசதங்களையும் அடித்துள்ளார்.