SLvsBAN: சூப்பர் 4 சுற்றில் முதல் வெற்றியைப் பதிவு செய்தது இலங்கை
செய்தி முன்னோட்டம்
ஆசிய கோப்பைத் தொடரில் சூப்பர் 4 சுற்றின் இரண்டாவது போட்டியில் இன்று இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் பலப்பரீட்சை செய்தன. டாஸை வென்ற வங்கதேச அணியின் கேப்டன் சகிப் அல் ஹசன் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
குழுச்சுற்றிலேயே இலங்கை அணிக்கு எதிராக தோல்வியைச் சந்தித்திருந்தது வங்கதேசம். மேலும், சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியிலும் வங்கதேசம் தோல்வியடைந்திருந்தது. எனவே, ஆசிய கோப்பைத் தொடரில் இறுதிச் சுற்றுக்கு முன்னேற இது வங்கதேசத்துக்கு முக்கியமான போட்டி.
முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணியில் குசால் மெண்டிஸ் மற்றும் சதீரா சமரவிக்ரமா ஆகிய இரண்டு பேட்டர்களைத் தவிர, பிறர் பெரிதாக சோபிக்கவில்லை.
ஆசிய கோப்பை
குறைவான ரன்களையே இலக்காக நிர்ணியித்த இலங்கை:
குசால் மெண்டிஸ் 50 ரன்களைக் கடந்த உடனேயே ஆட்டமிழக்க, சமரவிக்ரமா இறுதி வரை களத்தில் நின்று தன்னால் இயன்ற அளவ 93 ரன்களைக் குவித்தார். இலங்கையின் டாப் முதல் லோயர் ஆர்டர் வரை அனைத்து பேட்டர்களுமே சொற்ப ரன்களிலேயே ஆட்டமிழந்தனர். தொடக்க ஆட்டக்காரராகக் களமிறங்கிய பதும் நிசங்கா மட்டும் 66 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் 40 ரன்களைக் குவித்திருந்தார்.
பந்துவீச்சில், வங்கதேச அணியின் தஸ்கின் அகமது மற்றும் ஹசன் மஹ்முத் ஆகிய இருவரும் 3 விக்கெட்டுகளையும், ஷோரிஃபுல் இஸ்லாம் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தனர்.
வங்கதேச அணியின் மற்ற இரு பிரதான பௌலர்களாகிய சகிப் அல் ஹசன் மற்றும் நசும் அகமது ஆகிய இருவரும் 4.40 மற்றும் 3.10 என எக்கானமியாகப் பந்து வீசியிருந்தனர்.
ஆசிய கோப்பை
இறுதிச்சுற்று வாய்ப்பை இழந்த வங்கதேசம்:
இரண்டாவதாக பேட்டிங் செய்யக் களமிறங்கிய வங்கதேச அணியிலும் பேட்டர்கள் பெரிய அளவில் ரன் குவிப்பில் ஈடுபடவில்லை. தொடக்க ஆட்டக்காரர்களாகக் களமிறங்கிய முகமது நைம் மற்றும் மெஹிடி ஹாசன் விரைவாக ரன்களைச் சேர்க்கவில்லை என்றாலும் விக்கெட்டுகளை இழக்காமல் விளையாடினர்.
11 ஓவர் வரை விக்கெட் இழப்பின்றி 55 ரன்களைக் குவித்திருந்த வங்கதேச அணி, அடுத்த 7 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்தது. வங்கதேச பேட்டர்கள் அனைவரும் குறைவான ரன்களிலேயே ஆட்டமிழக்க, ஆறாவதாகக் களமிறங்கிய தௌஹித் ஹிரிதாய் மட்டும் 82 ரன்களைக் குவித்தார்.
இறுதியில் 11 பந்துகள் மீதமிருக்கும் போதே 236 ரன்களுக்கு இலங்கையிடம் ஆல்அவுட்டானது வங்கதேசம். சூப்பர் 4 சுற்றின இரண்டாவது போட்டியையும் இழந்து, இறுதிச் சுற்றுக்கான வாய்ப்பைக் கிட்டத்தட்ட இழந்திருக்கிறது வங்கதேசம்.