3வது ஒருநாள் போட்டியில் இலங்கை அபார வெற்றி! 2-1 என தொடரையும் வென்றது!
மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தானை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை அபார வெற்றி பெற்றது. டாஸ் வென்ற ஆப்கான் கிரிக்கெட் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த நிலையில், 22.2 ஓவர்களில் 116 ரன்களுக்கு சுருண்டது. அபாரமாக பந்துவீசிய இலங்கை அணியின் துஷ்மந்த சமீரா 4 விக்கெட்டுகளையும், வனிந்து ஹசரங்க 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதையடுத்து 117 ரன்கள் எனும் எளிய இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி 16 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து இலக்கை எட்டியது. இதன் மூலம் 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதோடு, மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 2-1 எனக் கைப்பற்றியது.
போட்டியில் வீரர்கள் எட்டிய மைல்ஸ்டோன்கள்
இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்த சமீரா இந்த போட்டியில் 4 விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம் 44 போட்டிகளில், 50 விக்கெட்டுகள் எனும் மைல்கல்லை எட்டியுள்ளார். ஆப்கானிஸ்தானுக்கு எதிராக, அவர் மூன்று ஆட்டங்களில் ஏழு விக்கெட்டுகளை எடுத்துள்ளார். மேலும் ஒருநாள் போட்டிகளில் தனது முதல் நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றினார். இலங்கையில் நிசாங்க 34 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்களுடன் 51 ரன்கள் எடுத்தார். இது அவருக்கு ஏழாவது அரைசதமாகும். இதற்கிடையில், கருணாரத்னே ஆட்டமிழக்காமல் 56 ரன்கள் எடுத்ததன் மூலம் தனது 8வது ஒருநாள் அரைசதத்தை விளாசினார். மூன்றாவது போட்டியின் ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை சமீரா வென்றார்.