'ஃபிக்ஸர்' சர்ச்சை தொடர்பாக LLC நோட்டீஸ் எதுவும் வழங்கவில்லை: ஸ்ரீசாந்த் விளக்கம்
டிசம்பர் 6, புதன்கிழமை இந்தியா கேபிடல்ஸ் மற்றும் குஜராத் ஜெயண்ட்ஸ் இடையேயான எலிமினேட்டரின் போது, கெளதம் கம்பீர் தன்னை 'ஃபிக்ஸர்' என்று அழைத்ததாக, வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் குற்றம் சுமத்தியதை அடுத்து, லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் (எல்எல்சி) கமிஷனர் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக கூறப்பட்டது. அதில், டி20 போட்டியில் விளையாடும் போது, ஒப்பந்தத்தை மீறியதாக ஸ்ரீசாந்த் மீது குற்றம்சுமத்தப்பட்டுள்ளது. கம்பீரை விமர்சித்து, ஸ்ரீசாந்த் வெளியிட்ட வீடியோக்களை நீக்கிய பிறகு மட்டுமே அவருடன் பேச்சுவார்த்தை தொடங்கப்படும் என்றும் அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே வேளையில் நடுவர்களும் சர்ச்சையில் தங்கள் அறிக்கையை LLC குழுவிற்கு அனுப்பியுள்ளனர். ஆனால் அதில், 'ஃபிக்ஸர்' என்று அழைத்ததாக ஸ்ரீசாந்தின் கூற்றுகள் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நோட்டீஸ் எதுவும் வரவில்லை என ஸ்ரீசாந்த் மறுப்பு
இந்த நோட்டீஸ் குறித்த தகவல்கள் வைரலான நிலையில், கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தனக்கு எந்த ஒரு நோட்டீசும் LLC அனுப்பவில்லை என கூறியுள்ளார். அப்படியே வந்தாலும், தான் அதை சட்ட ரீதியாக எதிர்கொள்ள தயார் எனவும் கூறியுள்ளார். அதோடு, விசாரணைக்கு நோட்டீஸ் அனுப்பினால், இருபக்கமும் அனுப்பபட வேண்டும் என்றும், சர்ச்சையில் சிக்கிய ஒருவருக்கு மட்டும் அனுப்புவது தவறு எனவும் கூறியுள்ளார். அதோடு, செய்திகளை பிரசுரிக்கும் முன்னர் அதன் உண்மை தன்மையை விசாரித்துவிட்டு பிரசுரிக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.