Sports RoundUp : உலகக்கோப்பையில் இந்தியா அபார வெற்றி; சச்சினின் சாதனையை முறியடித்த ரோஹித்; மேலும் பல முக்கிய செய்திகள்
செய்தி முன்னோட்டம்
புதன்கிழமை (அக்.11) நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை லீக் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது.
போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 272 ரன்கள் எடுத்தது.
ஹஷ்மத்துல்லா ஷாஹிதி 80 ரன்களும், அஸ்மத்துல்லா உமர்சாய் 62 ரன்களும் எடுத்தனர். இந்திய அணியில் சிறப்பாக பந்துவீசிய ஜஸ்ப்ரீத் பும்ரா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இந்திய அணியில் அபாரமாக விளையாடி ரோஹித் ஷர்மா சதமடித்த நிலையில், விராட் கோலி கடைசி வரை அவுட்டாமால் அரைசதம் அடித்ததோடு, 35 ஓவர்களிலேயே இந்திய அணி இலக்கை எட்டி வெற்றி பெறச் செய்தார்.
இதன் மூலம், இந்திய அணி தரவரிசை பட்டியலில் தற்போது இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.
Rohit Sharma breaks Sachin Tendulkar record
சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் உலகக்கோப்பை 2023 லீக் போட்டியில் புதன்கிழமை இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா சதமடித்து 131 ரன்கள் குவித்தார்.
ஒருநாள் கிரிக்கெட்டில் ஒட்டுமொத்தமாக இது அவருக்கு 31வது சதமாகும். மேலும் ஒருநாள் உலகக்கோப்பை வரலாற்றில் இது அவருக்கு ஏழாவது சதமாகும்.
இதன் மூலம், ஒருநாள் உலகக்கோப்பையில் அதிக சதமடித்து முதலிடத்தில் இருந்த சச்சின் டெண்டுல்கரின் (6 சதங்கள்) சாதனையை ரோஹித் ஷர்மா முறியடித்தார்.
இதற்கிடையே, 63 பந்துகளில் சதமடித்து, ஒருநாள் உலகக்கோப்பையில் குறைந்த பந்துகளில் சதமடித்த இந்தியர் என்ற சாதனை படைத்துள்ளார்.
மேலும், சர்வதேச கிரிக்கெட்டில் 556 சிக்ஸர்களுடன் அதிக சிக்ஸ் அடித்த கிறிஸ் கெயிலின் சாதனையை முறியடித்து முதலிடத்தை கைப்பற்றியுள்ளார்.
Asian Champions Tropy Women Hockey India Squad announced
ஆசிய சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய மகளிர் ஹாக்கி அணி அறிவிப்பு
2023 அக்டோபர் 27 முதல் நவம்பர் 5 வரை நடைபெற உள்ள மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி 2023இல் பயணிக்கும் 20 பேர் கொண்ட இந்திய மகளிர் ஹாக்கி அணியை ஹாக்கி இந்தியா புதன்கிழமை அறிவித்தது.
சமீபத்தில் 2023 ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலப் பதக்கத்தை வென்ற இந்தியா, ஜப்பான், சீனா, தென்கொரியா, மலேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுடன் இந்த போட்டியில் பங்கேற்கிறது.
இந்தப் போட்டியில் இந்திய அணிக்கு சவிதா புனியா தலைமை தாங்குகிறார். துணை கேப்டனாக டீப் கிரேஸ் எக்கா செயல்பட உள்ளார்.
27 அக்டோபர் 2023 அன்று தாய்லாந்துக்கு எதிரான போட்டியில் இந்தியா தனது முதல் போட்டியில் விளையாட உள்ளது.
Virat Kohli improved in ICC ODI Batter Rankings
ஐசிசி ஒருநாள் தரவரிசையில் விராட் கோலி முன்னேற்றம்
புதன்கிழமை நடைபெற்ற ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் உலகக்கோப்பை லீக் போட்டியில் இந்திய அணியின் விராட் கோலி 55 ரன்கள் எடுத்தார்.
மேலும், முன்னதாக, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியிலும் 85 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய நிலையில், ஐசிசி ஒருநாள் பேட்டிங் தரவரிசையில் விராட் கோலி இரண்டு இடங்கள் முன்னேறி ஏழாவது இடத்தை பிடித்துள்ளார்.
மறுபுறம், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேஎல் ராகுலும் தரவரிசையில் 15 இடங்கள் முன்னேறி 19வது இடத்தை பிடித்துள்ளார். பந்துவீச்சில் குல்தீப் யாதவ் எட்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
TNAA welcomes tamilnadu players who participated in asian games
ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு
தமிழ்நாடு தடகள சங்கம் புதன்கிழமை சென்னை விமான நிலையத்தில் வந்தடைந்த ஹாங்சோ ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்ற விளையாட்டு வீரர்களுக்கு தலா ஒரு சவரன் தங்க நாணயம் வழங்கி கவுரவித்தது.
தமிழகத்தைச் சேர்ந்த பிரவீன் சித்திரவேல், வித்யா ராம்ராஜ், ராஜேஷ் ரமேஷ், சுபா வெங்கடேசன் ஆகியோர் மொத்தமாக இந்தியாவுக்காக எட்டு பதக்கங்களை வென்று பெருமை சேர்த்தனர்.
ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்ற இந்திய தடகள பயிற்சியாளர் பி. நாகேஷுக்கும் ஒரு சவரன் தங்க நாணயம் வழங்கப்பட்டது.
இருப்பினும், சுபா வெங்கடேசனும், பிரவீனும் சென்னை செல்லும் விமானத்தை தவறவிட்டதால் அவர்களால் இதில் பங்கேற்க முடியவில்லை.