Sports Round Up : ஆசிய சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய மகளிர் ஹாக்கி அணி அரையிறுதிக்கு தகுதி; மேலும் பல முக்கிய செய்திகள்
ஒருநாள் உலகக்கோப்பை 2023 லீக் சுற்றில் வியாழக்கிழமை (நவம்பர் 2) நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணி 302 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி வெற்றி பெற்றது. முன்னதாக, போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 357 ரன்கள் குவித்தது. ஷுப்மன் கில், விராட் கோலி மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகிய மூவரும் அரைசதம் விளாசினர். தொடர்ந்து பேட்டிங் செய்த இலங்கை, இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 55 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி படுதோல்வியை சந்தித்தது. இந்திய தரப்பில் சிறப்பாக பந்துவீசிய முகமது ஷமி 5 விக்கெட்டுகளையும், முகமது சிராஜ் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
2023 இந்தியன் சூப்பர் லீக் : பஞ்சாப் எஃப்சியை வீழ்த்தியது மும்பை சிட்டி எஃப்சி
இந்தியன் சூப்பர் லீக் போட்டியில் இல் பஞ்சாப் எஃப்சிக்கு எதிராக நடந்த கால்பந்து ஆட்டத்தில் மும்பை சிட்டி எஃப்சி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. வியாழக்கிழமை நடைபெற்ற இந்த போட்டியில், மும்பை அணி முதல் பாதியில் பின்னடைவை சந்தித்தது. முதல் பாதியில் பஞ்சாப் ஒரு கோல் அடித்து முன்னிலை பெற்ற நிலையில், கிரெக் ஸ்டீவர்ட் மற்றும் ஜார்ஜ் பெரேரா டயஸ் ஆகியோர் இரண்டாவது பாதியில் தலா ஒரு கோல் அடிக்க மும்பை சிட்டி எஃப்சி அணி முன்னிலை பெற்றது. அதன் பின்னர் பஞ்சாப் கடைசி வரை கோல் அடிக்க முயன்றும் அது முடியாததால் இறுதியில் மும்பையிடம் தோல்வியைத் தழுவியது. இந்த வெற்றியின் மூலம் மும்பை புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
ஆசிய சாம்பியன்ஸ் டிராபி : அரையிறுதிக்கு முன்னேறியது இந்திய மகளிர் ஹாக்கி அணி
ஜார்க்கண்டில் நடந்து வரும் மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி 2023 தொடரில் வியாழக்கிழமை நடந்த தனது கடைசி லீக் ஆட்டத்தில் தென்கொரியாவை வீழ்த்தி இந்திய ஹாக்கி அணி அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய அணியில் சலிமா டெட் 2 கோல்களையும், நவ்நீத் கவுர், வந்தனா கட்டாரியா, நேஹா கோயல் தலா ஒரு கோலையும் அடித்தனர். தென்கொரியா கடைசி வரை கோல் எதுவும் அடிக்காத நிலையில், இந்தியா 5-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதன் மூலம் அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா, சனிக்கிழமை நடக்கும் அரையிறுதி ஆட்டத்தில் மீண்டும் தென்கொரியாவை எதிர்த்து விளையாட உள்ளது.
ஒருநாள் உலகக்கோப்பை 2023 : முதல் அணியாக அரையிறுதிக்கு தகுதி பெற்றது இந்தியா
மும்பை வான்கடே மைதானத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற லீக் நிலை ஆட்டத்தில் இந்தியா 302 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியதன் மூலம், 2023 ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பையின் அரையிறுதிக்கு தகுதி பெற்ற முதல் அணி என்ற பெருமையை பெற்றது. இந்த போட்டி இந்திய அணிக்கு நடப்பு உலகக்கோப்பையில் ஏழாவதுபோட்டியாகும். மேலும், இதுவரை ஒரு போட்டியில் கூட தோல்வியடையாமல் 14 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இதன் மூலம், இந்திய அணி தொடர்ந்து நான்காவது முறையாக ஒருநாள் உலகக்கோப்பை அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. 2011இல் இந்தியா கோப்பையை வென்ற நிலையில், 2015 மற்றும் 2019களில் அரையிறுதி வரை முன்னேறியது குறிப்பிடத்தக்கது.
ஒருநாள் கிரிக்கெட்டில் சச்சினின் சாதனையை முறியடித்தார் விராட் கோலி
வியாழக்கிழமை மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த இலங்கைக்கு எதிரான உலகக் கோப்பை போட்டியின் போது இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி 2023இல் 1,000 ஒருநாள் ரன்களை நிறைவு செய்தார். விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு காலண்டர் ஆண்டில் 1000 ரன்களுக்கு மேல் அடிப்பது இது எட்டாவது முறையாகும். இதன் மூலம், ஒரு காலண்டர் ஆண்டில் அதிகமுறை 1000 ரன்களுக்கு மேல் ஒருநாள் கிரிக்கெட்டில் அடித்த சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்தார். முன்னதாக, சச்சின் டெண்டுல்கர் 7 முறை 1000 ரன்களுக்கு மேல் அடித்திருந்ததே சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.